இளைஞனே பருவ நெருப்பில் காய்ச்சிய வாளே!
இளைஞனே
பருவ நெருப்பில்
காய்ச்சிய வாளே!
நாளை என்பது
உன் திருநாளே
நினைவிருக்கட்டும்
உன்
புருவ நெருப்பில்
பூகம்பங்கள்
இமையைத் திறந்தால்
சூர்யோதயங்கள்
நீ கொட்டி முழங்கினால்
உலகமே செவிடு
எட்டி உதைத்தால்
திசைகளும் தவிடு
இது உன் பலம்
அசுர பலம்
உன் பலவீனங்கள்
என் விழி ஈரங்கள்
நீ
தலை நிமிர்ந்து நடந்தால்
நீல வானம் குடைபிடிக்கும்
தாழ்ந்து இழிந்து குனிந்தால்
கைக்குட்டையும் எட்டாத
வானமாகும்
வா
நீ வெல்ல
விண்வெளி காத்திருக்கிறது
நீ பந்தாட
கிரகங்கள் காத்திருக்கின்றன
புழுதிகளையும்
பிரளயமாக்க
விழி திற!
வெற்றி உனக்குமுன்
கொடியெடுத்துப் போகிறது
வருக இளைஞனே! வருக
No comments:
Post a Comment