Thursday, September 6, 2018

யாருக்கு நல்ல அறிவுரை கூறவேண்டும்?


விவேகசிந்தாமணி பாடல்: 10

"வானரம் மழைதனில் நனையத் தூக்கணம்
தானொரு நெறிசொலத் தாவிப் பிய்த்திடும்
ஞானமும் கல்வியும் நவின்ற நூல்களும்
ஈனருக் குரைத்திடில் இடர தாகுமே"

பொருள் விளக்கம் :
ஒரு குரங்கு மழையில் நனைந்துகொண்டிருந்தது, அதனைப் பார்த்த தூக்கணாங் குருவி கவலைப் பட்டு அதனிடம் சொன்னது , நீயும் என்னைப் போல கூடு கட்டி இருந்தால் இப்படி மழையில் நனைந்து கொண்டு இருக்க வேண்டியது இல்லையே என்று. அதனால் ஆத்திரம் கொண்ட குரங்கு அந்த தூக்கணாங் குருவி கூட்டையே பிய்த்து எறிந்துவிட்டது. அதுபோல
நாம் படித்த அரிய நூல்களில் உள்ள பல நல்ல கருத்துகளை ஈன புத்தியுடைய கெட்டவர்களுக்கு சொல்லப் போனால் சொல்பவர்களுக்கே அது ஆபத்தாக முடியும்.

இதைத் தான் தெய்வப் புலவர் வள்ளுவர் இரண்டே அடியில் கூறியிருப்பார்

"புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்
நன்குசலச் சொல்லு வார்."

குறள் விளக்கம் :
நல்லோர் நிறைந்த அவையில் மனத்தில் பதியும்படி கருத்துக்களை சொல்லும் வல்லமை பெற்றவர்கள், அறிவற்ற பொல்லாதோர் உள்ள அவையில் அறவே பேசாமாலிருப்பதே நலம்.