Thursday, April 5, 2018

பாஜக நடத்தும் நாடகம்


உண்மை தெரியாமல் அல்லது தெரிந்தும் மௌனியாய் இருப்பவர்களே, கேளுங்கள், பாரத் மாதா கி ஜே ! என்று கூறுவது, திரை அரங்கில் தேசிய கீதம் பாடும் போது எழுந்து நிற்பது, என்று தேசப்பற்றை வலிந்து ஊட்டுவது, இது தான் தேசப்பற்றா? உண்மையில் இந்திய தேசப்பற்றுக்கும் பாஜக கட்சிக்கும்  எந்த சம்பந்தமும் இல்லை, பாஜக வை எதிர்ப்பவர்கள் தேசத்துரோகிகள் என்று கட்டமைக்கப் படுகிறார்கள், பழைய வரலாற்றை எடுத்துப் பார்த்தால் பாஜகவினர் சாவர்க்கர், கோட்சே வழி வந்தவர்கள் என்பது தெரியும், வெள்ளையர்களுக்கு எதிராக சுதந்திரப்  போர்  புரியாதவர்கள், காட்டிக்கொடுத்தவர்கள், தேசத்தந்தையை சுட்டுக்கொன்றவர்கள், இவர்களுக்கு சுதந்திர இந்தியாவை சொந்தம் கொண்டாட எந்த அருகதையும் இல்லை.

அதே போல் இந்து மதத்திற்கும் அவர்கள் தான் காவலன் என்பது போல் காட்டப்படுகிறது, நூறு ஆண்டுகளுக்கு முன்னாள் எந்த இந்துத்துவா இயக்கங்களும் இல்லாமல் தான் இருந்தது, ஆனால் பல்லாயிரம் வருடங்களாக இந்து மதம் சனாதன தர்மம் என்று இயங்கி வருகிறது, முகலாயர்கள் காலத்திலோ, வெள்ளையர்கள் ஆட்சியிலோ அது அழிந்து விட வில்லை. ஆனால் இந்த கொள்ளையர்களால் இன்று அவமானப்பட்டு கிடக்கிறது.
இந்தியாவின் சிறப்பம்சமே, வேற்றுமையில் ஒற்றுமை தான், அதன் பன்முகத்தன்மையை சிதைத்து இந்து மதம் என்ற ஒற்றை மதத்தை நோக்கியும், இந்தி மொழி என்ற ஒற்றை மொழியை நோக்கியும் நகர்த்தும் முயற்சி நடைபெற்று வருகிறது, இது மிகப் பெரிய பேராபத்து, இது தொடர்ந்தால் எதிர்காலத்தில் இந்தியா உடையும்.
சொந்தத் தாய் மண்ணில் ஒருவன் அகதியைப் போல் நடத்தப்பட்டால் அவன் பொங்கி எழத்தான் செய்வான். அவன் ஆயுதத்தை தூக்கத் தான் செய்வான், அது தான் உலகில் காலம் காலமாக நடந்து வந்திருக்கிறது, அது தான் இன்றும் நடந்து  கொண்டிருக்கிறது. தடி எடுத்தவனெல்லாம்,தண்டல் காரன் ஆகிவிட முடியாது, இன்று வரை நம்மில் தொண்ணூறு சதவீதம் பேர் குண்டு வெடிப்பையும் துப்பாக்கி சூட்டையும் நேரில் சந்தித்தவர்கள் கிடையாது, அதில் நமது கை கால்களையோ சொந்தங்களையோ இழந்தவர்கள் கிடையாது, அந்த மோசமான அனுபவம் இல்லாமல் அமைதியான நல்ல வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம், இதைக் கெடுத்து அமைதியைக் குலைத்து  நாட்டை சுடுகாடாக்கி விடுவார்கள் இந்த பாவிகள். இந்த நாசக்காரர்களை இந்த பாரத புண்ணிய மண்ணை விட்டே விரட்ட வேண்டும். அது இன்றைய இளைஞர்கள் கையில் தான் உள்ளது. இளைஞர்களே எச்சரிக்கை தேவை.
பசித்திரு! தனித்திரு !! விழித்திரு !!!

Tuesday, March 20, 2018

தமிழ்நாடு இந்துக்களுக்கு எதிரானதா? இல்லை, இந்துத்வாவிற்கு எதிரானது, ஏன் ?

ராமராஜ்ஜியம் ரத யாத்திரை என்னுடைய பார்வை

ஏன் இந்த எதிர்ப்பு தமிழகத்தில் மட்டும்?

தமிழ்நாடு இந்துக்களுக்கு எதிரானதா? இல்லை, இந்துத்வாவிற்கு எதிரானது, ஏன் ?

அறுபத்தி மூன்று நாயன்மார்களும், பன்னிரு ஆழ்வார்களும் பிறந்த மண் இது, பக்தியுடன், மொழியையும் வளர்த்தவர்கள் நாங்கள், தமிழகத்தில் உள்ள இத்தனை பழமையான கோவில்களைப் போல் வேறு எந்த மாநிலத்திலாவது இருக்கிறதா? மிருகமாகத் திரிந்தவனை மனிதனாக்க தோற்றுவிக்கப் பட்டதே மதம், ஆனால் இன்றோ நீங்கள் மதம் பிடித்து மிருகமாகத் திரிகிறீர்கள். எங்களுக்கு பெரியார் பேச்சுக்கு கைதட்டி ரசிக்கவும் முடியும், அப்படியே கோவிலுக்குச் சென்று மனதார வணங்கவும் முடியும், அது தான் பகுத்தறிவு. அது தமிழர்களுக்கே உரித்தானது. இன்று தமிழர்களின் பெயர்க்குப் பின்னால் ஜாதிப் பெயர்  இல்லாமல் இருக்கிறதே, வேறு எந்த மாநிலத்திலாவது இப்படி இருக்கிறதா? தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவர்கோர் குணமுண்டு என்று சும்மாவா கூறினார்கள் ?

இதே போல, இந்தியாவில் நபி வழி ராஜ்ஜிய ரத யாத்திரை, ஏசு வழி ராஜ்ஜிய ரத யாத்திரை என அனைத்து மாநிலங்களிலும் அமைதியாக ஊர்வலம் போக முடியுமா ?
இந்தியா இந்துக்களுக்கு மட்டுமே சொந்தமானது அல்ல, இங்கு வாழும் அனைத்து மத, இன மற்றும் மொழி  சார்ந்த மக்களுக்கும் பொதுவான ஒரு மத சார்பற்ற நாடு. நம் முன்னோர்கள் இரத்தம் சிந்தி வெள்ளையர்களிடமிருந்து பெரும் கனவுகளோடு பெற்றுத் தந்த மத சார்பற்ற நமது பாரதத்தை இது போன்ற ரத யாத்திரைகளால் ரத்த பூமியாக மாற்றி விடாதீர்கள்.
நீங்கள் பதவி ஆசை காட்டி தமிழகத்தின் ஆட்சியாளர்களை அடிமைப் படுத்தலாம், ஆனால் தமிழர்களை ஒரு போதும் அடிமைப் படுத்த முடியாது. 

Sunday, February 4, 2018

என் மனம் கவர்ந்த குறள்கள் சில - அறத்துப்பால்

அறத்துப்பால்

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் 
தெய்வத்துள் வைக்கப் படும்
உலகில் வாழ வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன் வானில் வாழ்வதாகச் சொல்லப்படும் தெய்வத்துக்கு இணையாக வைத்து மதிக்கப்படுவான்.

குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் 
மழலைச்சொல் கேளா தவர்
தங்கள் குழந்தைகளின் மழலைச் சொல்லைக் கேட்காதவர்கள்தான் குழலோசை, யாழோசை ஆகிய இரண்டும் இனிமையானவை என்று கூறுவார்கள்.

தந்தை மகற்காற்று நன்றி அவையத்து 
முந்தி இருப்பச் செயல்
தந்தை தன் மகனுக்குச் செய்யத்தக்க நல்லுதவி, கற்றவர் கூட்டத்தில் தன் மகன் முந்தியிருக்கும்படியாக அவனைக் கல்வியில் மேம்படச் செய்தலாகும்

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை 
என்நோற்றான் கொல்எனும் சொல்
மகன் தன் தந்தைக்குச் செய்யத் தக்க கைம்மாறு, இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும்

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் 
சான்றோன் எனக்கேட்ட தாய்
நல்ல மகனைப் பெற்றெடுத்தவள் என்று ஊரார் பாராட்டும் பொழுது அவனைப் பெற்றபொழுது அடைந்த மகிழ்ச்சியைவிட அதிக மகிழ்ச்சியை அந்தத் தாய் அடைவாள்.

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து 
மன்னுயிர்க் கெல்லாம் இனிது
பெற்றோரைக் காட்டிலும் பிள்ளைகள் அறிவிற் சிறந்து விளங்கினால், அது பெற்றோருக்கு மட்டுமேயன்றி உலகில் வாழும் அனைவருக்கும் அக மகிழ்ச்சி தருவதாகும்.

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் 
என்பும் உரியர் பிறர்க்கு
அன்பு இல்லாதவர் எல்லாப்பொருள்களையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வார்: அன்பு உடையவர் தம் உடமையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர்.

இனிய உளவாக இன்னாத கூறல் 
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று
இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது நல்ல பழம் இருக்க நச்சுக்காயை உண்பது போலாகும்.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை 
செய்ந்நன்றி கொன்ற மகற்கு
எந்த அறத்தை மறந்தார்க்கும் வாழ்வு உண்டு; ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தார்க்கு வாழ்வில்லை.

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை 
ஆரிருள் உய்த்து விடும்
அடக்கம் அழியாத புகழைக் கொடுக்கும். அடங்காமை வாழ்வையே இருளாக்கி விடும்.

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் 
செல்வர்க்கே செல்வம் தகைத்து
பணிவு என்னும் பண்பு, எல்லார்க்கும் நலம் பயக்கும். ஏற்கனவே செல்வர்களாக இருப்பவர்களுக்கு அந்தப் பண்பு, மேலும் ஒரு செல்வமாகும்.

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் 
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு
ஒருவர் எதைக் காத்திட முடியாவிட்டாலும் நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும். இல்லையேல் அவர் சொன்ன சொல்லே அவர் துன்பத்துக்குக் காரணமாகி விடும்.

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே 
நாவினாற் சுட்ட வடு
நெருப்பு சுட்ட புண்கூட ஆறி விடும்; ஆனால் வெறுப்புக் கொண்டு திட்டிய சொற்கள் விளைத்த துன்பம் ஆறவே ஆறாது.

ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் 
உயிரினும் ஓம்பப் படும்
ஒழுக்கம் ஒருவர்க்கு உயர்வு தரக் கூடியது என்பதால், அதை உயிரைக் காட்டிலும் மேலானதாக காக்க வேண்டும்.

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை 
இகழ்வார்ப் பொறுத்தல் தலை
தன்னையே தோண்டினாலும் தோண்டுபவர் விழுந்துவிடாதபடி தாங்கும் நிலம் போலத், தன்னை வார்த்தைகளால் அவமதிப்பவரையும் மதித்துப் பொறுப்பது முதன்மை அறம்.

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் 
கேடும் நினைக்கப் படும்
பொறாமைக் குணம் கொண்டவனின் வாழ்க்கை வளமாக இருப்பதும், பொறாமைக் குணம் இல்லாதவனின் வாழ்க்கை வேதனையாக இருப்பதும் வியப்புக்குரிய செய்தியாகும்.

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க 
சொல்லிற் பயனிலாச் சொல்
பயனளிக்காத சொற்களை விடுத்து மனத்தில் பதிந்து பயனளிக்கக் கூடிய சொற்களையே கூற வேண்டும்.

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு 
என்ஆற்றுங் கொல்லோ உலகு
தமக்கு நீரைத் தருகின்ற மேகங்களுக்கு உயிர்கள் என்ன கைம்மாறு (பதில் உதவி) செய்கின்றன? அதுபோல் மேகங்கள் போன்ற பெரியவர்கள் செய்கின்ற ஒப்புரவுகளும் கைம்மாறு எதிர்பார்ப்பன அல்ல.

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது 
ஊதியம் இல்லை உயிர்க்கு
ஏழைகளுக்குக் கொடுப்பது; அதனால் புகழ் பெருக வாழ்வது; இப்புகழ் அன்றி மனிதர்க்குப் பயன் வேறு ஒன்றும் இல்லை.

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் 
தோன்றலின் தோன்றாமை நன்று
எந்தத் துறையில் ஈடுபட்டாலும் அதில் புகழுடன் விளங்கவேண்டும்; இயலாதவர்கள் அந்தத் துறையில் ஈ.டுபடாமல் இருப்பதே நல்லது.

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு 
இவ்வுலகம் இல்லாகி யாங்கு
பொருள் இல்லாதவர்க்கு இப்பூவுலக இன்பம் இல்லாதது போலவே, உயிர்கள்மேல் அருள் இல்லாதவர்க்கு மேல் உலக இன்பம் இல்லை.

வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின் 
மெலியார்மேல் செல்லு மிடத்து
தன்னைவிட கீழானவர்களை, மெலிந்தவர்களைத் துன்புறுத்த நினைக்கும் போது, தன்னைவிட மேலானவர், வலியவர் முன்னால் அஞ்சி நிற்கும் நிலைமை தனக்கு இருப்பதை மறந்துவிடக் கூடாது.

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் 
தீமை இலாத சொலல்
உண்மை என்று சொல்லப்படுவது எது என்றால், எவர்க்கும் எத்தகைய தீங்கையும் தராத சொற்களைச் சொல்வதே ஆகும்.

பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த 
நன்மை பயக்கும் எனின்
குற்றமற்ற நன்மையை விளைவிக்கக் கூடுமானால் பொய்யான சொல்லும்கூட உண்மை என்று கூறத்தக்க இடத்தைப் பெற்றுவிடும்.

தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் 
தன்நெஞ்சே தன்னைச் சுடும்
மனச்சாட்சிக்கு எதிராகப் பொய் சொல்லக்கூடாது; அப்படிச் சொன்னால், சொன்னவரின் மனமே அவரைத் தண்டிக்கும்.

உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார் 
உள்ளத்து ளெல்லாம் உளன்
ஒருவன் தன் உள்ளம் அறியப் பொய் இல்லாமல் நடப்பானானால் அத்தகையவன் உலகத்தாரின் உள்ளங்களில் எல்லாம் இருப்பவனாவான்.

புறள்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை 
வாய்மையால் காணப் படும்
நீரில் குளிப்பதால் உடலின் அழுக்கு மட்டுமே நீங்கும்; மனம் அழுக்குப்படாமல் தூய்மையுடன் விளங்கிட, சொல்லிலும் செயலிலும் உண்மை வேண்டும்.

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் 
பொய்யா விளக்கே விளக்கு
(புறத்தில் உள்ள இருளை நீக்கும்) விளக்குகள் எல்லாம் விளக்குகள் அல்ல, சான்றோர்க்கு (அகத்து இருள் நீக்கும்) பொய்யாமையாகிய விளக்கே விளக்கு ஆகும்.

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால் 
தன்னையே கொல்லுஞ் சினம்
ஒருவன் தன்னைத்தானே காத்துக் கொள்ள வேண்டுமானால், சினத்தைக் கைவிட வேண்டும். இல்லையேல் சினம், அவனை அழித்துவிடும்.

சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் 
ஏமப் புணையைச் சுடும்
சினங்கொண்டவரை அழிக்கக் கூடியதாகச் சினமென்னும் தீயே இருப்பதால், அது அவரை மட்டுமின்றி, அவரைப் பாதுகாக்கும் தோணி போன்ற சுற்றத்தையும் அழித்துவிடும்.

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண 
நன்னயஞ் செய்து விடல்
நமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டிப்பதற்குச் சரியான வழி, அவர் வெட்கித் தலைகுனியும்படியாக அவருக்கு நன்மை செய்வதுதான்.

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா 
பிற்பகல் தாமே வரும்
அடுத்தவர்க்குத் தீமையைக் காலையில் செய்தால், நமக்குத் தீமை நம்மைத் தேடி மாலையில் தானாக வரும்.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் 
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை
இருப்பதைப் பகிர்ந்து உண்டு, பல உயிர்களையும் பாதுகாப்பது, நூல் எழுதியவர்கள் தொகுத்த அறங்களுள் எல்லாம் முதன்மையான அறமாகும்.

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் 
பற்றுக பற்று விடற்கு

எதிலும் பற்றில்லாதவராக யார் இருக்கிறாரோ அவரிடம் மட்டும் பற்றுக் கொள்ள வேண்டும். துறவறத்தினர் தம் பற்றுகளை விட்டொழிப்பதற்கு அத்தகையோரிடம் கொள்ளும் பற்றுதான் துணை நிற்கும்.

Sunday, January 28, 2018

தமிழ் மூதாட்டி அவ்வையின் எக்காலத்திற்கும் பொருந்தும் நற்பாடல்கள் சில

அவ்வையார் நூல்கள்

மூதுரை


நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந் நன்றி
'என்று தருங்கொல்?' என வேண்டா- நின்று
தளரா வளர் தெங்கு தாள் உண்ட நீரைத்
தலையாலே தான் தருதலால்.

1
தென்னைமரம் தன் கால்களில் நீரை உண்டுவிட்டுத் தலையால் இளநீரைத் தரும். அதுபோல ஒருவர் செய்த உதவி நன்றியாகத் தானே வந்து சேறும். என்று தருவார் என்று காத்திருக்கக் கூடாது. 


நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மேல் எழுத்துப் போல் காணுமே- அல்லாத
ஈரமிலா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம்
நீர் மேல் எழுத்துக்கு நேர்.

2
நெஞ்சில் ஈரம் உள்ள நல்லவர்க்கு உதவி செய்தால் அது அவர்களின் நெஞ்சில் கல்லில் பொளித்து எழுதிய எழுத்துப் போல அழியாமல் நிலைத்திருக்கும். நெஞ்சில் ஈரமில்லாதவர்களுக்கு உதவினால் அவர்கள் அதனைத் தண்ணீரில் எழுதும் எழுத்து எழுதும்போதே மறைந்துவிடுவது போல அப்போதே மறந்துவிடுவார்கள். 

அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவளாய்
நட்டாலும் நண்பு அல்லார் நண்பு அல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்.

4
காய்ச்சினாலும் பால் சுவை குன்றாது. அதுபோல நல்ல நண்பர்கள் நட்பால் துன்பம் அடைந்தாலும் விலகமாட்டார்கள். நன்னட்பு இல்லாதவர் துன்பம் வரும் காலத்தில் மாறிவிடுவர். வெள்ளை நிறம் கொண்ட சங்கு சுட்டாலும் சுண்ணாம்பாக மாறி வீட்டில் அடிக்கும்போது வெள்ளை நிறத்தையே தரும். அதுபோல வறுமையுற்றுக் கெட்டுப்போனாலும் மேன்மக்கள் மேன்மக்களாகவே திகழ்வர். 


அடுத்து முயன்றாலும் ஆகும் நாள் அன்றி
எடுத்த கருமங்கள் ஆகா-தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்
பருவத்தால் அன்றிப் பழா.

5
எவ்வளவு பெரிய ஓங்கி உயர்ந்த மரமானாலும் அதன் பருவ காலத்தில்தான் பழுக்கும். அதுபோல அடுத்தடுத்து முயன்றாலும் செயல் நிறைவேற வேண்டிய காலம் வந்தால்தான் நாம் எடுத்துத் தொடுத்த (தொடங்கிய) செயல் நிறைவேறும். 


நல்லாரைக் காண்பதுவும் நன்றே; நலம்மிக்க
நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே-நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று.

8
நல்லவர்களைக் காண்பதுவும் நல்லது. நல்லவர்களின் சொல் நன்மை மிகுந்திருக்கும். எனவே அதனைக் காதால் கேட்பதும் நல்லது. நல்லவர்களின் நற்குணங்களை பிறருக்கு எடுத்துச் சொல்வதும் நல்லது. நல்லவர்களோடு சேர்ந்திருப்பதும் நல்லது. 


தீயாரைக் காண்பதுவும் தீதே; திரு அற்ற
தீயார் சொல் கேட்பதுவும் தீதே-தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது.

9
தீயவர்களைக் கண்ணில் காண்பதுவும் தீது. யாவரும் விரும்பும் தன்மை இல்லாத தீயவர்களின் சொல்லைக் காதால் கேட்பதுவும் தீது. தீயவர் ஒருவரின் குணத்தை வேறொருவரிடம் சொல்வதும் தீது. தீயவரோடு நட்புக் கொண்டிருப்பதும் தீது. 


நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்-தொல் உலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை.

10
நல்லவர் ஒருவர் இருந்தால் அவருக்காக மழை பொழியும். மழை போன்ற கொடை வழங்கப்படும். இறையருளால் வழங்கப்படும். அந்த மழை நல்லவர் அல்லாதவருக்கும் பயன்படும். எப்படி? உழவன் நெல்லம்பயிருக்கு நீர் இறைக்கிறான். அந்த நீர் வாய்க்காலின் வழியே ஓடுகிறது. வாய்க்கால் கரையில் உள்ள புல்லுக்கும் அந்த நீர் உதவுகிறது. அதுபோல இறையாற்றல் நல்லவருக்கு வழங்கும் கொடை அல்லாதவருக்கும் பயன்படும். இதுதான் உலக இயற்கை. தீயவர் நலம் பெறுவது இதனால்தான். 

கான மயில் ஆடக் கண்டிருந்த வான் கோழி
தானும் அதுவாகப் பாவித்து-தானும் தன்
பொல்லாச் சிறகை விரித்து ஆடினால் போலுமே
கல்லாதான் கற்ற கவி.

14
காட்டிலே மயில் ஆடுவதைப் பார்த்த வான்கோழிதன்னையும் அந்த மயிலாகப் பாவனை செய்துகொண்டு, தன் பொலிவு இல்லாத சிறகுகளை விரித்துஆடினால் எப்படி இருக்குமோ, அப்படி இருக்கிறது கல்வி அறிவு இல்லாத ஒருவன் கற்றறிந்தவன் பாட்டைக் கேட்டுப் பழகிக்கொண்டு பாடுவது. (கற்றவன் பாடலுக்கு உரிய ஆழ்ந்த பொருளைச் சொல்ல முடியும். கல்லாதவன் சொல்லமுடியுமா) 


அடக்கம் உடையார் அறிவிலர் என்று எண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா-மடைத் தலையில்
ஓடுமீன் ஓட உறுமீன் வரும் அளவும்
வாடி இருக்குமாம் கொக்கு.

16
தன்னடக்கத்துடன் இருப்பவரைப் பார்த்து “இவர் அறிவில்லாதவர்” என்று எண்ணி அவரை வெல்ல நினைக்கவும் கூடாது. நீர் பாயும் மடை வாயிலில் சிறிய மீன்கள் ஓடும்போது வாட்டத்துடன் பார்த்துக்கொண்டிருக்கும் கொக்கு பெரிய மீன்வந்ததும் கௌவிக்கொள்வது போன்றது வலிமை உடையவரின் அடக்கம் என உணர்ந்துகொள்ள வேண்டும். 

அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வார் உறவு அல்லர்; -அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறவார் உறவு.

17
நீர் அற்றுப்போன குளத்தை விட்டு நீர்ப்பறவைகள் நீங்கிவிடும். அதுபோலத் துன்பம் வந்த காலத்திலில் விலகிப் போய்விடுபவர் உறவினர் ஆகமாட்டார். நீர் அற்றுப்போனாலும் அந்தக் குளத்தில் கொட்டி, ஆம்பல், நெய்தல் போன்ற பூக்கொடிகள் ஒட்டிக்கொண்டே இருப்பது போலத் துன்பம் வந்த காலத்திலும் துணைநின்று உதவுபவரே உறவுக்காரர் ஆவார். 

ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல் நீர்
நாழி முகவாது நானாழி-தோழி
நிதியும் கணவனும் நேர் படினும் தம்தம்
விதியின் பயனே பயன்.

19
ஆழமான கடலில் அளவற்ற நீர் இருக்கிறது. படி ஒன்றை அதில் அமுக்கி அமுக்கி மொண்டாலும் நாலு படி நீரை அந்தப் படியால் முகந்துகொள்ள முடியாது. அதுபோலத்தான் துய்க்கும் வாழ்க்கை அளவும் இருக்கும். அது விதியின் பயன். விதியின் அளவு. ஏராளமான செல்வம் இருந்தாலும் அத்தனையும் அனுபவிக்க முடியுமா? நல்ல கணவன் இருந்தாலும் அனுபவிக்க முடியுமா? 

உடன் பிறந்தார் சுற்றத்தார் என்று இருக்க வேண்டா
உடன் பிறந்தே கொல்லும் வியாதி-உடன் பிறவா
மாமலையில் உள்ள மருந்தே பிணி தீர்க்கும்
அம் மருந்து போல் வாரும் உண்டு.
20
உடன் பிறந்தவர் மட்டுமே சுற்றத்தார் என்று நினைத்துக்கொண்டு இருக்க வேண்டியது இல்லை. சர்க்கரை-நோய் போன்ற சில வியாதிகள் நாம் பிறக்கும்போதே நம்முடன் சேர்ந்தே பிறந்து நம்மைக் கொல்கின்றன. நம்முடன் பிறக்காமல், பெரிய மலையில் எங்கோ பிறந்து வளர்ந்த மூலிகை, இடையிலே நம்மை வந்து தாக்கும் பிணியைப் போக்குகின்றன. இந்த மருந்து போன்றவர்களும் நம்முடன் இருக்கிறார்கள். 


இல்லாள் அகத்து இருக்க இல்லாதது ஒன்று இல்லை
இல்லாளும் இல்லாளே ஆமாயின்-இல்லாள்
வலி கிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்இல்
புலி கிடந்த தூறாய் விடும்.

21
மனைவி வீட்டில் இருந்தால், கணவனுக்கு இல்லாத பொருள் ஒன்றுமே இல்லை. எல்லாம் அவளாக இருந்து பயன்படுவாள். அந்த மனைவி பண்பு இல்லாதவளாக இருந்தால், எதற்கெடுத்தாலும் முரண்பாடாகவே பேசிக்கொண்டிருந்தால், அந்த நிலையில் அவன் வாழும் வீடு புலி பதுங்கியிருக்கும் புதராக மாறிவிடும். 


நற்றாமரைக் கயத்தில் நல் அன்னம் சேர்ந்தார் போல்
கற்றாரைக் கற்றாரே காமுறுவர்-கற்பிலா
மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டில்
காக்கை உகக்கும் பிணம்.

24
அன்னம் தாமரை பூக்கும் குளத்துக்குப் போய்ச் சேரும். அது போலக் கற்றாரைக் கற்றார் விரும்பி ஒன்றுசேர்வர். பிணத்தை எரிக்காமலும் புதைக்காமலும் போடும் முதுகாட்டிற்கு விரும்பிச் சென்று காக்கை பிணத்தை உண்ணும். அதுபோலக் கல்வி அறிவு இல்லாத மூர்க்கரை மூர்க்கரே விரும்பிச் சென்று சேர்ந்துகொள்வார்கள். கற்பு = கற்றல். 


மன்னனும் மாசு அறக் கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்பு உடையன்-மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பு இல்லை கற்றோர்க்குச்
சென்ற இடம் எல்லாம் சிறப்பு.

26
மன்னனையும் மாசு போகக் கற்றவனையும் சீர்தூக்கிப் பார்த்தால் மன்னனைக் காட்டிலும் கற்றவன் சிற்றப்புடையவன். எப்படி என்றால், மன்னனுக்கு அவனது ஆட்சிக்கு உட்பட்ட நாட்டில் மட்டுமே சிறப்பு. கற்றவனுக்கோ அவன் சென்ற இடத்திலெல்லாம் சிறப்பு. 


கல்லாத மாந்தர்க்குக் கற்று உணர்ந்தார் சொல் கூற்றம்
அல்லாத மாந்தர்க்கு அறம் கூற்றம்-மெல்லிய
வாழைக்குத் தான் ஈன்ற காய் கூற்றம் கூற்றமே
இல்லிற்கு இசைந்து ஒழுகாப் பெண்.

27
படிப்பறிவு இல்லாதவர்களுக்குப் படித்தறிந்தவர் சொல்லும் சொல் கூற்றம். அறநெறியைப் பின்பற்றாதவர்களுக்கு பிறர் பின்பற்றும் அறநெறி கூற்றம். வாழை மரத்துக்குத் தான் ஈன்ற காய் கூற்றம். இல்லத்தாரோடு சேர்ந்துபோகாமல் முரண்பட்டு நிற்கும் பெண் நல்வாழ்வுக்குக் கூற்றம். கூற்றம் = சாகடிக்கும் தெய்வம். நல்வழி

சாதி இரண்டொழிய வேறில்லை; சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் -மேதினியில்
இட்டார் பெரியோர்; இடாதார்இழி குலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி.

2
பட்டறிவு கண்டு வைத்துள்ளபடியும், நீதி தவறாத நெறிமுறைப்படியும் பறைசாற்றினால், இந்த உலகில் இருப்பவை இரண்டே சாதியைத் தவிர வேறு இல்லை. இல்லாதவர்களுக்குக் கொடுப்பவர்கள் பெரியோர் ஆவர். அவர்கள் உயர்ந்த சாதி. கொடுக்காதவர்கள் தாழ்ந்த சாதி. 


ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவாரோ? மாநிலத்தீர் - வேண்டாம்
"நமக்கும் அது வழியே; நாம் போம் அளவும்
எமக்கு என்" என்று இட்டு உண்டு இரும்.

10
இறந்தவரை எண்ணி ஆண்டுக்கணக்கில் அழுது புரண்டாலும், இறந்தவரின் நினைவுநாள் ஆண்டு அண்டு தோறும் வரும்போதெல்லாம் இறந்தவரை நினைத்துக்கொண்டு அழுது அழுது புரண்டாலும், மாண்டுபோனவர் திரும்பி வருவது இல்லை. மாயிலத்தில் உள்ளவர்களே! அழவேண்டா. நமக்கும் அவர் போன அதே வழிதான். எனவே, எனக்கு இவை எதற்கு என்று எண்ணி மற்றவர்களுக்கு உணவிட்டுத் தானும் உண்டு வாழ்ந்துகொண்டிருங்கள். நாம் போகும் வரை இட்டும் உண்டும் வாழ்ந்துகொண்டிருங்கள். 


ஆற்றங் கரையின் மரமும் அரசு அறிய
வீற்றிருந்த வாழ்வும் வீழும் அன்றே - ஏற்றம்
உழுது உண்டு வாழ்வதற்கு ஒப்பு இல்லை கண்டீர்
பழுது உண்டு வேறு ஓர் பணிக்கு.

12
ஆற்றங்கரையில் ஆற்றுநீரை உண்டுகொண்டு வளமோடு இருந்த மரமும் ஒருநாள் விழுந்துவிடும். அரசனே எண்ணிப் பார்க்கும்படி பெருமிதத்தோடு வாழ்ந்த வாழ்வும் ஒருநாள் விழுந்துவிடும். பின் எதுதான் விழாது என்கிறீர்களா? உழுது, அதன் விளைச்சலை உண்டு வாழ்தலே ஏற்றம். பெருமை. இதற்கு ஒப்பான வாழ்வு வேறு எதுவும் இல்லை. வேறு எந்தப் பணியாக இருந்தாலும் அதற்குப் பழுது உண்டு. 

பிச்சைக்கு மூத்தகுடி வாழ்க்கை பேசுங்கால்
இச்சை பல சொல்லி இடித்து உண்கை - சீச்சி
வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது
உயிர் விடுகை சால உறும்.

14
பிச்சை எடுக்கும் வாழ்க்கை மிகமிக இழிவு. அந்த வாழ்க்கைக்கு மூத்த குடிவாழ்க்கை எது தெரியுமா? சொல்கிறேன் கேள். பலப்பல ஆசைகளைக் காட்டி கேட்போர் மனத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக இடித்து நப்பாசை கொள்ளும்படிச் செய்து அவர்கள் தரும் பொருளால் தன் வயிற்றை வளர்த்தல் ஆகும். சீச்சீ! இப்படி வாழ்வது மானக்கேடு. இந்த மானக்கேட்டோடு வாழ்வதைக் காட்டிலும் தன் உயிரை விட்டுவிடுவது மேலானது. செய் தீவினை இருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்
எய்த வருமோ இரு நிதியம்?-வையத்து
அறும் பாவம் என்ன அறிந்து அன்று இடார்க்கு இன்று
வெறும் பானை பொங்குமோ மேல்!

17
செய் தீவினை இருக்கத் தெய்வத்தை நொந்தக்கால் எய்த வருமோ இருநிதியம் வையத்து அறும் பாவம் என்ன அறிந்து அன்று இடார்க்கு இன்று வெறும்பானை பொங்குமோ மேல் வெறும் பானை பொங்குமோ? (உலையில் அரிசி போட்டு அடுப்பு எரித்தால்தானே சோறு பொங்கும்.) அதுபோல, முன்பு கொடுத்து வைத்திருந்தால்தானே இன்று செல்வம் நமக்குத் திரும்ப வந்து சேறும். பாவம் செய்துவிட்டு, முயன்று ஈட்டியும் பணம் சேரவில்லையே என்று தெய்வத்தை நொந்துகொள்வதால் என்ன பயன். 


பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்;-கூடுவிட்டு இங்கு
ஆவிதான் போயின பின்பு யாரே அனுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம்?

22
பணத்துக்காகப் பாடுபட்டுகின்றனர். பணத்தைத் தேடிக்கொள்கின்றனர். தேடிய பணத்தை யாருக்கும் தெரியாமல் புதைத்து வைக்கின்றனர். அனுபவிக்காமல் மறைத்து வைக்கின்றனர். இவர்கள் கேடு கெட்ட மனிதர்கள். இப்படிக் கேடுகெட்ட மனிதரே! ஒன்று சொல்கிறேன் கேளுங்கள். உங்கள் உடம்புக் கூட்டை விட்டுவிட்டு உங்கள் ஆவி போன பின்பு அந்தப் பணத்தை யார்தான் அனுபவிக்கப் போகிறார்கள்? பாவிகளே! சொல்லுங்கள். 

வேதாளம் சேருமே வெள் எருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே - மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரம் சொன்னார் மனை.

23
பொதுமக்கள் கூடியிருக்கும் மன்றத்தில் நடுவு நிலைமையோடு (நடுநிலையோடு) சாட்சியோ (கரி), தீர்ப்போ கூறவேண்டும். அப்படிக் கூறாமல் வாதாடுவோரில் ஒருவர் பக்கம் அவரது நன்மையை மட்டும் கருத்தில் கொண்டோ, செல்வாக்கைக் கருதி அவரிடம் அச்சம் கொண்டோ ஓரவஞ்சனையாக எதுவும் சொல்லக்கூடாது. இப்படி ஓரம் சொன்னால், அவர் வீட்டில், அச்சுறுத்தும் ஆவி வேதாளம் சேரும். வெள்ளை எருக்கு பூக்கும். பாதாள மூலி (பாசி, பாசான்) படரும். செல்வச் செழிப்பைச் சேரவொட்டாமல் தடுக்கும் மூதேவி வலியச் சென்று இருந்துகொண்டு வாழ்வான். பாம்புகள் குடியேறும். இப்படியெல்லாம் வீடு பாழாகப் போய்விடும். 


நீறில்லா நெற்றிபாழ்; நெய்யில்லா உண்டிபாழ்
ஆறில்லா ஊருக்கு அழகுபாழ் - மாறில்
உடன்பிறப் பில்லா உடம்புபாழ்; பாழே
மடக்கொடி இல்லா மனை.

24
திருநீறு இல்லாத நெற்றி பாழ். நெய் இல்லாத உணவு பாழ். பாயும் ஆறு இல்லாத ஊருக்கு அழகு பாழ். கருத்து மாறுபாடு இல்லாத உடன்பாறப்பாளர் இல்லாத உடம்பு பாழ். (துணை வேண்டுமே) மனைவி இல்லாத மனை பாழ். பாழ் = 0, பாழ் = ஒன்றுமில்லாத வெற்றிடம். 
 
ஆன முதலில் அதிகம் செலவானால்
மானம் அழிந்து மதிகெட்டுப் - போனதிசை
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு.

25
தேடி முதலாக வைத்திருக்கும் பொருளை விட அதிகமாக ஒருவன் செலவு செய்தால் என்ன ஆகும். தன்மானம் அழிந்துபோகும். புத்தி கெட்டுச் செயல்படுவான். அவன் எங்குச் சென்றாலும் அங்குள்ள அனைவர்க்கும் திருடனாகத் தென்படுவான். ஏழு பிறப்பிலும் கொடியவனாக மாறிவிடுவான். எண்ணிப்பார். உண்மை விளங்கும்.


மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்
பசி வந்திடப் பறந்து போம்.

26
மானம் = தன்மான உணர்வு, குலம் = குலப்பெருமை பற்றிய சிந்தனை, கல்வி = கற்ற கல்வியின் திறமை, வண்மை = உடல் வளம், அறிவுடைமை = எண்ணிப் பார்க்கும் அறிவு, தானம் = கொடை வழங்கும் வள்ளல் தன்மை, தவம் = தவம் செய்யும் அறநெறி, உயர்ச்சி = உயர்வு பற்றிய எண்ணம், தாளாண்மை = செயலாற்ற முயலுதல், தேனின் கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் = தேனைப் போல் பேசும் பெண்மீது ஆசைப்படுதல் ஆகிய பத்தும் பசி வந்திடப் பறந்து போம். 

உண்பது நாழி உடுப்பது நான்கு முழம்
எண்பது கோடி நினைந்து எண்ணுவன - கண் புதைந்த
மாந்தர் குடி வாழ்க்கை மண்ணின் கலம்போலச்
சாந்துணையும் சஞ்சலமே தான்.

28
உண்பது நாள் ஒன்றுக்கு ஒரு நாழி அளவு தானியத்தால் சமைத்த உணவு. இடையில் அற்றம் மறைக்க ஒருவர் உடுத்திக் கொள்வது நான்குமுழத் துணி. என்னுவன எண்பது கோடி நினைவுகள். கண் புதைந்துபோயிருக்கும் மாந்தர்கள் நாம். நாம் குடும்பம் நடத்துகிறோமே அந்தக் குடிவாழ்க்கையானது, மண்ணால் செய்த பாண்டம் போன்றது. (நம் உடம்பும் மண்ணால் செய்த பாண்டம் போன்றது. எப்போது கீழே விழுந்து உடையுமோ தெரியாது). இந்த உண்கலம் போலச் சாம் துணையும் நம் உடம்புக்கும், வாழ்க்கைக்கும் கவலைகள்தாம். சஞ்சலம் = கவலை, கலம் = பாண்டம், பாத்திரம். 


கல்லானே ஆனாலும் கைப்பொருள்ஒன் றுண்டாயின்
எல்லாரும் சென்றாங் கெதிர்கொள்வர் - இல்லானை
இல்லாளும் வேண்டாள்; மற்றீன்றெடுத்த தாய்வேண்டாள்
செல்லாது அவன்வாயிற் சொல்.

34
கையிலே பொருள் வைத்திருப்பவன் ஆயின், அவன் கல்வி அறிவு இல்லாதவன் ஆனாலும், அவன் வரும்போது அவனிடம் எல்லாரும் சென்று எதிர்கொண்டு வரவேற்பர். கையில் பொருள் இல்லாத ஏழையாக வாழ்ந்தால், அவனை மனைவியும் விரும்பமாட்டாள்; பெற்றெடுத்த தாயும் விரும்பமாட்டாள். அவன் வாயிலிருந்து வரும் சொற்கள் செல்லாக் காசுகள் ஆகிவிடும். நாலு கோடிப் பாடல்கள்

ஔவையார் ஒரு சமயம் சில புலவர்களைக் காணச் சென்றபோது அப்புலவர்கள் கவலைதோய்ந்த முகத்தோடு காணப்படவே அதன் காரணத்தை வினவினார்.

"நாளைப் பொழுது விடிவதற்குள் நான்கு கோடிப் பாடல்கள்" இயற்றவேண்டும் என மன்னவன் ஆணையிட்டுள்ளான். அதனால் தான் கவலையடைந்துள்ளோம்" என்று அவர்கள் கூறினராம்.

இதைக்கேட்ட ஔவையார், "இவ்வளவுதானா, இதற்காகவா கவலை கொண்டுள்ளீர்கள்" என்று கூறி கோடி என்ற வார்த்தையை அடக்கிய 4 பாடல்களைக் சொன்னார். இதுவே நாலு கோடிப் பாடல்கள் எனப்படும்

"மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று 
மிதியாமை கோடி பெறும்"

தம்மை மதியாதவர்களின் வீட்டு வாயிலில் அவரையும் ஒரு பொருட்டாகக் கருதிச் சென்று மிதியாதிருத்தல் கோடிபெறும்.
 


"உண்ணீர் உண்ணீரென்று உபசரியார் தம்மனையில் 
உண்ணாமை கோடி பெரும்"

உண்ணீர் உண்ணீர்” என்று உபசரியாதவர்கள் வீட்டில் உண்ணாதிருத்தல் கோடி பெறும். (“என்றூட்டாதார்” என்பதும் பாடம்.)
 


"கோடி கொடுப்பினும் குடிப்பிறந்தார் தம்முடனே 
கூடுதலே கோடி பெறும்"

கோடிப் பொன் கொடுத்தாயினும் நல்ல குடிப்பிறப்பு உடையவர்களோடு. கூடியிருப்பது கோடி பெறும்.
 


"கோடானு கோடி கொடுப்பினுந் தன்னுடைநாக் 
கோடாமை கோடி பெறும்"


எத்தனை கோடி தந்தாலும் தன்னுடைய நாவாவது கோணாதிருக்கும் (உண்மையே பேசும் தன்மை) கோடி பெறும்.
 

சித்தர் பாடல்கள் சில


அழுகணிச் சித்தர் பாடல்

ஊத்தைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி 
மாற்றிப்பிறக்க மருந்தெனக்குக் கிட்டுதில்லை
 
மாற்றிப்பிறக்க மருந்தெனக்குக் கிட்டுமென்றால்
 
ஊத்தைச் சடலம் விட்டே - என் கண்ணம்மா
 
உன் பாதம் சேரேனே?

கொல்லன் உலைபோலக் கொதிக்குதடி என் வயிறு 
நில் என்று சொன்னால் நிலைநிறுத்தக் கூடுதில்லை;
 
நில்லென்று சொல்லி நிலைநிறுத்த வல்லார்க்குக்
 
கொல் என்று வந்த நமன் - என் கண்ணம்மா
 
குடியோடிப் போகாணோ!

மாமன் மகளடியோ மச்சினியோ நானறியேன் 
காமன் கணையெனக்கு கனலாக வேகுதடி
 
மாமன் மகளாகி மச்சினியும் நீயானால்
 
காமன் கணைகளெல்லாம் என் கண்ணம்மா!
 
கண்விழிக்க வேகாவோ

புல்லரிடத்திற்போய் பொருள் தனக்கு கையேந்தி 
பல்லை மிகக்காட்டிப் பரக்க விழிக்கிறண்டி
 
பல்லை மிகக் காட்டாமல் பரக்க விழிக்காமல் - என் கண்ணம்மா
 
புல்லரிடம் போகாமல் என் கண்ணம்மா!
 
பொருளெனக்குத் தாராயோ

பையூரிலேயிருந்து பாழூரிலே பிறந்து 
மெய்யூரில் போவதற்கு வேதாந்த வீடறியேன்
 
மெய்யூரில் போவதற்கு வேதாந்த வீடறிந்தால்
 
பையூரும் மெய்யூரும் என் கண்ணம்மா!
 
பாழாய் முடியாவோ

உன்னை மறந்தல்லோ உளுத்த மரமானேன் 
தன்னை மறந்தார்க்குத் தாய்தந்தை யில்லையடி
 
தன்னை மறக்காமல் தாயாரு முண்டானால்
 
உன்னை மறக்காமல்  என் கண்ணம்மா 
ஒத்திருந்து வாழேனோ.பட்டினத்தார் பாடல்கள்

கல்லாப் பிழையும், கருதாப் பிழையும், கசிந்துருகி
நில்லாப் பிழையு நினையாப் பிழையும், நின்னஞ்செழுத்தைச்
சொல்லாப் பிழையுந், துதியாப் பிழையுந், தொழாப் பிழையும்
எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சியேகம்பனே.

ஐயிரண்டு திங்களா யங்கமெலாம் நொந்து பெற்றுப் 
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் - செய்யஇரு
 
கைப்புறத்தி லேந்திக் கனகமுலை தந்தாளை
 
எப்பிறப்பிற் காண்பே னினி

அரிசியோ நானிடுவே னாத்தாள் தனக்கு 
வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் - உருசியுள்ள
 
தேனே யமிர்தமே செல்வத் திரவியப்பூ
 
மானே யென வழைத்த வாய்க்கு

“முந்தித் தவங்கிடந்து முந்நூறு நாள் அளவும் 
அந்திபக லாச்சிவனை யாதரித்துத் -

தொந்திசரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ 
வெரியத் தழல்மூட்டு வேன்”


வட்டிலிலுந் தொட்டிலிலும் மார்மேலுந் தோன் மேலுங் 
கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து - முட்டச்
 
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டுந் தாய்க்கோ
 
விறகிலிட்டுத் தீமூட்டு வேன்

அள்ளியிடுவ தரிசியோ தாய்தலைமேல் 
கொள்ளிதனை வைப்பேனோ கூசாமல் - மெள்ள
 
முகமேன் முகம்வைத்து முத்தாடி யென்றன்
 
மகனே யெனவழைத்த வாய்க்கு

முன்னை இட்ட தீ முப்புறத்திலே
பின்னை இட்ட தீ தென் இலங்கையில்
அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே
யானும் இட்ட தீ மூள்க மூள்கவே

வேகுதே தீயதனில் வெந்து பொடி சாம்பல் 
ஆகுதே பாவியே னையகோ – மாகக்
குருவி பறவாமற் கோதாட்டி யென்னைக் 
கருதி வளர்த்தெடுத்த கை
வெந்தாளோ சோணகிரி வித்தகா நின்பதத்தில் 
வந்தாளோ என்னை மறந்தாளோ - சந்ததமு 
முன்னையே நோக்கி யுகந்துவரங் கிடந்துஎன்
 
றன்னையே யீன்றெடுத்த தாய்
வீற்றிருந்தா ளன்னை வீதிதனி லிருந்தாள் 
நேற்றிருந்தா ளின்று வெந்து நீறானாள் - பாற்றெளிக்க
 
வெல்லீரும் வாருங்க ளேதென் றிரங்காம
 
லெல்லாந் சிவமயமே யாம்

மனையாளு மக்களும் வாழ்வுந் தனமுந்தன் வாயின்மட்டே 
யினமான சுற்ற மயானம் மட்டே வழிக்கேது துணை
 
தினையாமள வெள் ளளவாகினு முன்பு செய்ததவந்
 
தனையாள வென்றும் பரலோகஞ் சித்திக்குஞ் சத்தியமே

ஒருமடமாதும் ஒருவனும்ஆகி இன்பசுகம் தரும் 
அன்பு பொருந்தி உணர்வுகலங்கி ஒழுகிய விந்து ஊறுசுரோணிதம்
 
மீதுகலந்து
 
பனியில் ஓர்பாதி சிறிதுளிமாது பண்டியல் வந்து


நாபிளக்க பொய்யுரைத்து நவநிதியம் தேடி 
நலனொன்றும் அறியாத நாரியரைக் கூடி 
பூப்பிளக்க வருகின்ற புற்றீசல் போல
 
புலபுலென கலகலெனப் புதல்வர்களை பெறுவீர் 
காப்பதற்கும் வகையறியீர் கைவிடவு மாட்டீர் 
கவர்பிளந்த மரத்துளையிற் கால்நுழைத்துக் கொண்டே 
ஆப்பதனை அசைத்துவிட்ட குரங்கதனை போல 
அகப்பட்டீரே கிடந்துழல அகப்பட்டீரே

காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே
சிவவாக்கியர் பாடல்
நட்டகல்லைத் தெய்வமென்று நாலுபுஷ்பந் சாத்தியே 
சுற்றிவந்து முணமுணென்று சொல்லு மந்திரம் ஏதடா
 
நட்டகல்லும் பேசுமோ நாதனுள் ளிருக்கையில்
 
சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ

ஓசையுள்ள கல்லைநீ உடைத்திரண்டாய் செய்துமே 
வாசலிற் பதித்தகல்லை மழுங்கவே மிதிக்கின்றீர்
 
பூசனைக்கு வைத்த கல்லில் பூவும் நீரும் சாத்து கிறீர்
 
ஈசனுக்குகந்த கல்லெந்தக் கல்லு சொல்லுமே

பண்ணிவைத்த கல்லையும் பழம் பொருளது என்றுநீர் 
எண்ணம் உற்றும் என்னபேர் உரைக்கின்றீர்கள் ஏழைகாள்
பண்ணவும் படைக்கவும் படைத்துவைத்து அளிக்கவும்
ஒண்ணும் ஆகி உலகு அளித்த ஒன்றை நெஞ்சில் உன்னுமே

பூசைபூசை யென்றுநீர் பூசைசெய்யும் பேதைகாள் 
பூசையுன்ன தன்னிலே பூசைகொண்ட தெவ்விடம் 
ஆதிபூசை கொண்டதோ வனாதிபூசை கொண்டதோ 
ஏதுபூசை கொண்டதோ வின்னதென் றியம்புமே

வாயிலே குடித்தநீரை எச்சிலென்று சொல்லுறீர் 
வாயிலே குதப்புவேத மெனப்படக் கடவதோ
 
வாயிலெச்சில் போக வென்று நீர்தனைக் குடிப்பீர்காள்
 
வாயிலெடச்சில் போனவண்ணம் வந்திருந்து சொல்லுமே

ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த சோதியை 
நாடி நாடி நாடிநாடி நாட்களும் கழிந்துபோய்
 
வாடி வாடி வாடிவாடி மாண்டுபோன மாந்தர்கள்
 
கோடிகோடி கோடிகோடி எண்ணிறந்த கோடியே.

சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாத பட்டரே 
வேர்த்துஇரைப்பு வந்தபோது வேதம்வந்து உதவுமோ
 
மாத்திரைப் போதும்முளே மறிந்து நோக்கவல்லிரேல்
 
சாத்திரப்பை நோய்கள்ஏது சத்திமுத்தி சித்தியே.

நாலுவேதம் ஒதுவீர் ஞானபாத அறிகிலீர் 
பாலுள்நெய்கலந்தவாறு பாவிகாள் அறிகிலீர்
 
ஆலம்உண்ட கண்டனார் அகத்துளே இருக்கவே
 
காலன்என்று சொல்லுவீர் கனாவிலும் அதில்லையே

சாமம்நாலு வேதமும் சகலசாத் திரங்களும் 
சேமமாக வோதினும் சிவனைநீர் அறிகிலீர்
 
காமநோயை விட்டுநீர் கருத்துளே உணர்ந்தபின்
 
ஊமையான காயமாய் இருப்பன் எங் கள்ஈசனே.

கோயிலாவது ஏதடா குளங்களாவது ஏதடா
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே
கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே
ஆவதும் அழிவதும் இல்லைஇல்லை இல்லையே.பறைச்சியாவது ஏதடா பணத்தியாவது ஏதடா
இறைச்சிதோல் எலும்பினும் இலக்கம்இட் டிருக்குதோ
பறைச்சி போகம் வேறதோ பணத்திபோகம் வேறதோ
பறைச்சியும் பணத்தியும் பகுத்துபாரும் உம்முளே.

கறந்தபால் முலைப்புகா கடைந்தவெண்ணை மோர்புகா 
உடைந்துபோன சங்கினோசை உயிர்களும் உடற்புகா
 
விரிந்த பூஉதிர்ந்த காயும் மீண்டும் போய் மரம்புகா
 
இறந்தவர் பிறப்பதில்லை இல்லையில்லை இல்லையே
.
சொற்குருக்க ளானதும் சோதிமேனி யானதும்
மெய்க்குருக்க ளானதும் வேணபூசை செய்வதும்
சத்குருக்க ளானதும் சாத்திரங்கள் சொல்வதும்
மெய்க்குருக்க ளானுதும் திரண்டுருண்ட தூமையே.

உடம்புயிர் எடுத்ததோ உயிருடம்பு எடுத்ததோ 
உடம்புயிர் எடுத்தபோது உருவமேது செப்புவீர்
 
உடம்புயிர் எடுத்தபோதஉயிஇறப்ப தில்லையே
 
உடம்புமெய் மறந்துகண்டு உணர்ந்துஞானம் ஓதுமே
.
இல்லை இல்லை இல்லையென்று இயம்புகின்ற ஏழைகாள் 
இல்லையென்று நின்றதொன்றை இல்லையென்ன லாகுமோ
 
இல்லையல்ல வொன்றுமல்ல இரண்டும் ஒன்றிநின்றதை
 
எல்லைகண்டு கொண்டபேர் இனிப்பிறப்பது இல்லையே

மாதமாதம் தூமைதான் மறந்துபோன தூமைதான் 
மாதமற்று நின்றலோ வளர்ந்துரூப மானது
 
நாதமேது வேதமேது நற்குலங்கள் ஏதடா
 
வேதமோதும் வேதியர் விளைந்தவாறும் பேசடா.

வேணும்வேணும் என்றுநீர் வீண்உழன்று தேடுவீர் 
வேணுமென்று தேடினாலும் உள்ளதல்ல தில்லையே
வேணும்என்று தேடுகின்ற வேட்கையைத் திறந்தபின் 
வேணும்என்ற அப்பொருள் விரைந்துகாண லாகுமே.

புலால்புலால் புலாலதென்று பேதமைகள் பேசுறீர் 
புலாலைவிட்டு எம்பிரான் பிரிந்திருந்தது எங்ஙனே
 
புலாலுமாய் பிதற்றுமாய் பேருலாவுந் தானுமாய்
 
புலாலிலே முளைத்தெழுந்த பித்தன்காணும் அத்தனே.மீனிறைச்சி தின்றதில்லை அன்றுமின்றும் வேதியர் 
மீனிருக்கும் நீரலோ மூழ்வதுங் குடிப்பதும்
 
மானிறைச்சி தின்றதில்லை அன்றுமின்றும் வேதியர்
 
மானுரித்த தோலலோ மார்புநூல் அணிவதும்.
159


ஆட்டிறைச்சி தின்றதில்லை அன்றுமின்றும் வேதியர் 
ஆட்டிறைச்சி அல்லவோ யாகம்நீங்கள் ஆற்றலே
 
மாட்டிறைச்சி தின்றதில்லை அன்றுமின்றும் வேதியர்
 
மாட்டிறைச்சி அல்லவோ மரக்கறிக் கிடுவது.

பிறந்தபோது கோவணம் இலங்குநூல் குடுமியும் 
பிறந்ததுடன் பிறந்ததோ பிறங்கு நாள் சடங்கெலாம்
 
மறந்தநாலு வேதமும் மனத்துளே உதித்ததோ
 
நிலம்பிறந்து வானிடிந்து நின்ற தென்ன வல்லிரே.

ஐயிரண்டு திங்களாய் அடங்கிநின்ற தூமைதான் 
கையிரண்டு காலிரண்டு கண்ணிரண்டும் ஆகியே
 
மெய்திரண்டு சத்தமாய் விளங்கிரச கந்தமும்
 
துய்யகாயம் ஆனதும் சொல்லுகின்ற தூமையே

உயிரிருந்தது எவ்விடம் உடம்பெடுத்த தின்முனம் 
உயிரதாவது ஏதடா உடம்பதாவது ஏதடா
 
உயிரையும் உடம்பையு ம்ஒன்றுவிப்பது ஏதடா
 
உயிரினால் உடம் பெடுத்த உண்மைஞானி சொல்லடா.

ஆடுநாடு தேடினும் ஆனைசேனை தேடினும் 
கோடிவாசி தேடினும் குறுக்கேவந்து நிற்குமோ
 
ஓடியிட்ட பிச்சையும் உகந்து செய்த தர்மமும்
 
சாடிவிட்ட குதிரைபோல் தர்மம் வந்து நிற்குமே.

பேய்கள்பேய்க ளென்கிறீர் பிதற்றுகின்ற பேயர்காள் 
பேய்கள்பூசை கொள்ளுமோ பிடாரிபூசை கொள்ளுமோ
 
ஆதிபூசை கொள்ளுமோ அனாதிபூசை கொள்ளுமோ
 
காயமான பேயலோ கணக்கறிந்து கொண்டதே.

கயத்துநீர் இறைக்கிறீர் கைகள் சோர்ந்து நிற்பதேன் 
மனத்துள்ஈரம் ஒன்றிலாத மதியிலாத மாந்தர்காள்
 
அகத்துள்ஈரங் கொண்டுநீர் அழுக்கறுக்க வல்லிரேல்
 
நினைத்திருந்த வோதியும் நீயும்நானும் ஒன்றலோ.பத்திரகிரியார் பாடல்

“ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைக் சுட்டறுத்துத்
தூங்காமல் தூங்கிச் சுகம் பெற வேண்டும்
நீங்காச் சிவயோக நித்திரை கொண்டே இருந்து
தேங்காக் கருணை வெள்ளம் தேக்க வேண்டும்
அருவாய் உருவாகி, ஆதி அந்தம் ஆகின்ற
குருவாக வந்து எனை ஆட்கொண்டு அருள வேண்டும்


There was an error in this gadget