Sunday, February 26, 2017

ஏறு தழுவுதல் எம் இனத்தின் உரிமைஎன் தந்தையின் கவிதை வரிகள்

வந்தேறிகள் அறிவரோ எங்கள் சிறப்புகளை ?
காளைக்கு வதையென்பர் கணக்கில்லாத் துயரமென்பர்
தாயின் அரவணைப்பும் காலனின் பாசப்பிடிப்பும்
ஒன்றெனக் கொள்வர்-அவ் வுணர்விலா அறிவிலிகள் !
ஆநிரை கவர்தலும் அதனை மீட்டலும்
தமிழனின் தனிச்சிறப்பு தரணிக்கோ பெருவியப்பு
எங்களது சிறப்புகளை துடைத்தழிக்க நீநினைத்தால்
திணவெடுத்த காளைகளும் மறங்கொண்ட மங்கையரும்
சதங்கண்ட தாயவளும் களம்வந்து முன்னிற்பர்
புறங்கொண்டு ஓடிடுவாய் உதைபட்டு மிதிபட்டு !

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சவுதிஅரேபியாவிலிருந்து தமிழ் நண்பர்கள்












இளைஞனே பருவ நெருப்பில் காய்ச்சிய வாளே!


இளைஞனே
பருவ நெருப்பில்

காய்ச்சிய வாளே!
நாளை என்பது
உன் திருநாளே
நினைவிருக்கட்டும்
உன்
புருவ நெருப்பில்
பூகம்பங்கள்
இமையைத் திறந்தால்
சூர்யோதயங்கள்
நீ கொட்டி முழங்கினால்
உலகமே செவிடு
எட்டி உதைத்தால்
திசைகளும் தவிடு
இது உன் பலம்
அசுர பலம்
உன் பலவீனங்கள்
என் விழி ஈரங்கள்
நீ
தலை நிமிர்ந்து நடந்தால்
நீல வானம் குடைபிடிக்கும்
தாழ்ந்து இழிந்து குனிந்தால்
கைக்குட்டையும் எட்டாத
வானமாகும்
வா
நீ வெல்ல
விண்வெளி காத்திருக்கிறது
நீ பந்தாட
கிரகங்கள் காத்திருக்கின்றன
புழுதிகளையும்
பிரளயமாக்க
விழி திற!
வெற்றி உனக்குமுன்
கொடியெடுத்துப் போகிறது
வருக இளைஞனே! வருக

Friday, February 24, 2017

என் தந்தை எழுதிய தமிழர் திருநாள் சிறப்புக்கவிதை

காடினைத் திருத்தி கழனியாக்கி

ஒட்டிய  வயிற்றுக்கு உணவீந்து

வேளாண்மை செய்தனைத் தனது

தாளாண்மையால் சிறக்கச் செய்து

தரணியில் சிறப்புற்றான் தமிழ்ப்பெருமகன் !


மேழிச் செல்வம் கோழைபடாது

உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை

உழுவார் உலகத்தார்க்கு அச்சாணி

என்றே வாழ்த்தினர் ! அவர்தம்

புகழைப் புலவர்கள் போற்றினர் !

உலகின் பசி போக்கியவன் நானா?

பத்தும் பறந்திடவும் குடிப்பிறப்பு மறந்திடவும்

மனிதனைக் கேள்விக்குறியால் மாறிடச் செய்யும்

பசியைப் போக்குபவன் நானா?

நான் மட்டுமா?

இல்லை! இல்லை!

நானொரு கருவி மட்டுமே !

காய்கதிர்ச் செல்வனும்  வான்முகில் மேகமும்

என்னுடனுழைத்த கோடுடைக் கொல்லேறு மன்றோ

போற்றக்குரியர் ! ஆம் அவர்களே போற்றக்குரியர் !

அவர்களன்றோ முதற்படி

அவர்முன்னே நானெப்படி?

என்றே நாணினான்

கேள்விக் கணைதொடுத்தான்

நன்றியறிதலின் பதிவெடுத்தான்

அவனது விடையினையே

விழாவாக்கிச் சிறப்பித்தான் !

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்

என்றே போற்றினான் காய்கதிர்ச் செல்வனை

அவனால் தோன்றிய விளைவின் பயனை

அவனியோர்க்கு ஊட்டும் முன்பு

தைத்திங்கள் முதல் நாளில்

அருணனுக்குப் படைத்து அன்பினிற் சிறந்தான் !

வாழையோடு கமுகும் வானுயர்ந்து நிற்க

மாவிலைத் தோரணத்தில் மஞ்சள் மணம்பரப்ப

கட்டிக் கரும்பினைத் தட்டிச் சாறெடுத்து

புத்தம் புதுநெல்லைக் குத்தி உலையிலிட்டு

ஆடி மகிழ்ந்து கூடிக் குலவையிட்டு

பொங்கிய பொங்கலோடு நெஞ்சகத் தன்பினையும்

ஒருசேர படைத்திட்டான் உதயனுக்கே நன்றியாக !

பொங்கல் பிறந்தது ! பொங்கல் பிறந்தது !

ஆம் புதுப்பொங்கல் பிறந்தது ! இன்பம் தழைத்தது !


களியெறிந்து கொல்லும் களம்கண்ட வீரமும்

சேலொடு வேல்பழிக்கும் கன்னியர்மேற் கொண்ட காதலும்

ஐயமிட்டு தானுண்ணும் சீர்மிகு வேளாண்மையும்

இரப்பவர்க்கு இல்லையென தரமிகு தாளாண்மையும்

நன்றிமறவா நற்பண்பும்

உயிரினும் மேலாம் மானமும்

தமக்கெனக் கொண்டான்

நாடும் மொழியும் நமதெனக் கொண்டான்

தமிழனாய் நின்றான்; தரணியில் சிறந்தான் !

முதல்நாள் மகிழ்வது கதிரவன் பொங்கல்

மறுநாள் முகிழ்வது காளையின் பொங்கல்

மீண்டும் திளைப்பது காணும் பொங்கல் !

தைபிறந்தால் வழி பிறக்கும் என்றே நின்ற

கன்னியரின் கடைக்கண் நேர்பட நோக்கினான்

சீறு கொண்ட காளையை வீறுகொண்டு அடக்கினான்

கன்னியோ டடங்கினான் கற்பு நெறி முகிழ்ந்தது !

இத்தகு சீரும் சிறப்பும் பழமையும் பண்பாடும்

இச்சகமெல்லாம் போற்றும் இருநெறி வாழ்வும்

தமிழர்க்கு உரியன ! தமிழர்க்கே உரியன !

ஆம் ! தமிழர்க்கு மட்டுமே உரியன!!!

சங்கத்தமிழ் கவிதைப் பூங்காவிற்காக நான் எழுதிய கவிதை


தலைப்பு: தூண்டிலுக்கு தப்பிய மீன்கள்

விழித்துக்கொண்டே தூங்குகின்றோம் விடியாத இரவை எண்ணி
ஏங்கி ஏங்கி அழுகின்றோம் ஏன் இப்படி நடந்ததென்று
அன்றில் பறவைகளாய் இணைந்து மகிழ்ந்து வாழ்ந்த நாங்கள்
இன்று நொந்துபோய் தனிமையை விரக்தியை ஏந்துகின்றோம்
மீண்டும் வராதா மீண்டு வராதா அந்த அழகிய பொற்காலம்
நடந்ததெல்லாம் கனவாய் பழங்கதையாய் மண்மூடிப் போனதுவே !
உண்மை தோற்பதில்லை தர்மம் என்றும் அழிவதில்லை என்று
சொல்லி சொல்லி வளர்க்கப் பட்டோமே அத்தனையும் பொய்யா
கடவுளுக்கு கண் இல்லையா காலனைக் காலால் உதைக்க
முள் குத்தினால் கூட மூச்சடைத்து விடுவாளே என் அம்மா
இன்று முள்ளிவாய்க்காலில் மொத்தமாய் மூடி விட்டார்களே !
உயிரோடிருந்தும் இன்று நடை பிணங்களாய் வாழ்ந்து
கொண்டிருக்கும் நாங்கள் தூண்டிலுக்கு தப்பிய மீன்கள் !