Wednesday, August 30, 2023

ஒரு பாடல் இரு பொருள்

காளமேகப் புலவர் பாடுகையிலேயே இரண்டு விதமாகப் பொருள் வரும்படியாகப் பாடுவதில் வல்லவராக இருந்தார். அதற்கு ஒரு உதாரணம்.

சோழ நாட்டில் பயணம் செய்து கொண்டிருந்த கவி காளமேகம் ஒரு நாள் பல இடங்கள் சுற்றி களைத்துப் போய் இரவு நேரத்தில் நாகப்பட்டினம் வந்து சேர்ந்தார்.

மிகுந்த பசி வேறு அவரை வாட்டியது. “எங்கு உணவு கிடைக்கும்?” என்று

ஊராரிடம் விசாரித்த போது “காத்தான் சத்திரம் என்ற சத்திரத்திற்குச்

சென்றால் உணவு கிடைக்கும் என்று சொன்னார்கள்.

காளமேகப் புலவர் பசித்த வயிற்றுடன் வெகுநேரம் காத்திருந்தாராம், ஆனால் அங்கேமாலை வரை சோறு சமைப்பதற்கான அறிகுறியே தென்படவில்லை.

பசி முற்றியதால் புலவர் அங்கேயே சுருண்டு படுத்து விட்டார். பின்

அடுத்த நாள் காலையில் சோறுண்ண அழைக்கப்பட்ட போது

பின்வருமாறு பாடினாராம்.


"கத்து கடல் சூழ் நாகைக் காத்தன் தன் சத்திரத்தில்

அத்தமிக்கும் போதினிலே அரிசி வரும் அதைக் குத்தி

உலையிலிட ஊரடங்கும் ஓரகப்பை அன்னம்

இலையிலிட வெள்ளி எழும்."


"ஒலிக்கின்ற கடல் சூழ்ந்த நாகையில் காத்தன் என்பவனின்

சத்திரத்தில் மாலை மயங்கும் வேளையில் அரிசி மூட்டைகள்

வரும். அதை குத்தி சமைக்கும் பக்குவத்திற்கு கொண்டு வந்து

அடுப்பில் ஏற்ற இரவு வந்து விடும். சோறாக்கி இலையில் இடும்போது

பொழுது விடிந்து விடும்"


என்று பொருள் தொனிக்க பாடியதைக்

கேட்ட காத்தன் பதறி வந்து பணிந்தான்.

அவர் காளமேகப் புலவர் என்று தெரிந்து மன்னிப்பு வேண்டினான்.

இனி அவ்வண்ணம் நிகழாது என்று உறுதி கொடுத்தான். பாடலை

மாற்றித் தருமாறு கேட்டுக் கொண்டான்.

ஆனால் புலவரோ பாடலை மாற்ற வேண்டிய அவசியமில்லை என்றும் அதன் உட்பொருளைப் புரிந்து கொண்டாலே போதும் என்றும் சொன்னார்.

அதாவது "ஒலிக்கின்ற கடல் சூழ்ந்த நாகையில் காத்தன் என்பவனின்

சத்திரத்தில் உலகில் எங்குமே அரிசி இல்லாமல் அஸ்தமிக்கும் வேளையிலும் அரிசி மூட்டைகள் வரும். அதை குத்தி சமைக்கும் பக்குவத்திற்கு கொண்டு வந்து அடுப்பில் ஏற்றுவதைக் கண்டதுமே ஊராரின் பசி அடங்கி விடும். சோறாக்கி ஒரு கரண்டி அன்னம் இலையில் போட்டதும் விடிவெள்ளியாகிய சுக்கிரன் அதன் வெண்மை நிறம் கண்டு நாணி எழுந்து விடும்" என்றாராம்.

கவியின் திறமைதான் என்னே ! தமிழின் பெருமைதான் என்னே !

அக்காலத்தில் புலவர்கள் திருமண வீட்டுக்குச் சொன்றால் மணமக்களை வாழ்த்தி செய்யுள் பாடுவது வழக்கம். ஏதோ ஒரு தெய்வத்தின் பெயரைக் குறிப்பிட்டு அத்தெய்வம் மணமக்களைக் காக்கட்டும் என்று பாடுவார்கள்.

காளமேகமும் அப்படி ஒரு திருமணத்திற்குச் சென்ற போது மணமக்களை வாழ்த்தி செய்யுள் பாட வேண்டி வந்தது. அதில் தர்மசங்கடம் என்னவென்றால் அங்கு வைணவர்களும் இருந்தனர், சைவர்களும் இருந்தனர். அக்காலத்தில் அவர்களுக்கிடையே கடுமையான சண்டை இருந்தது. திருமாலை வைத்துப் பாடினால் சைவர்களுக்கு வருத்தம். சிவனைப் பாடினாலோ வைணவர்களுக்கு வருத்தம்.

காளமேகம் சற்று யோசித்து விட்டு சைவ மற்றும் வைணவ அடியார்கள் இருபாலாரையும் மகிழ்விக்கும் விதத்தில் ஒரு பாடல் பாடினார்.

சாரங்க பாணிய ரஞ்சக்கரத்தர் கஞ்சனைமுன்

ஓரங்கங் கொய்த உயர்வாளர்-பாரெங்கும்

ஏத்திடுமை யாக ரினிதா யிருவரும்மைக்

காத்திடுவ ரெப்போதும் காண்.


சிவனைப் பாடுவதாகப் பார்த்தால் கீழ்கண்ட பொருள் வரும்.

சாரங்கபாணியர் - மானேந்திய கையினர்

அஞ்சு அக்கரத்தர் - பஞ்சாட்சர சொரூபமானவர்

முன் கஞ்சனை ஓரங்கம் கொய்த உகிர்வாள - முன் காலத்தில் தாமரை வாசனாகிய பிரம்மனை ஒரு தலையினைக் கிள்ளிய நகத்தினை உடையவர்.

பாரெங்கும் ஏத்திடும் உமை ஆகர் - உலகெல்லாம் போற்றுகின்ற உமை அம்மையைத் திருமேனியில் பாதியாகக் கொண்டவர்.

அந்த ஈசன் உம்மை எப்போதும் காத்திடுவாராக!


திருமாலைப் பாடுவதாகப் பார்த்தால் கீழ்கண்ட பொருள் வரும்.

சாரங்கபாணியர் - சாரங்கமாகிய வில்லைக் கைக் கொண்டவர்

அஞ் சக்கரத்தார் - அழகிய சக்கரத்தை உடையவர்

முன் கஞ்சனை ஓர் அங்கம் கொய்த உகிர்வாளர் - முன்னாளில்

மாமன் கம்சன் உடலைக் கிழித்த நகத்தினைக் கிழித்த நகத்தினை உடையவர்.

பாரெங்கும் ஏத்திடும் மையாகர் - உலகமெங்கும் போற்றிடும் கரிய மேனி உடையவர்.

அந்த திருமால் உம்மை எப்போதும் காத்திடுவாராக!


அவர் பாடலில் இப்படி தங்களுக்கு ஏற்றது போல பொருள் கொண்டு

வைணவ அடியார்களும், சைவ அடியார்களும் மகிழ்ந்தனர்.

இப்படி தமிழைத் தனக்கு வேண்டியது போல் வளைத்து அழகான பாடல்களைப் பாடிய காளமேகம் அக்காலத்து மக்களால் ‘கவிராஜ காளமேகம்’ என்று அழைக்கப்பட்டார். இரட்டுற மொழிதல் என்றழைக்கப்பட்ட இது போன்ற இருவேறு கருத்துக்களைப் பிரதிபலிக்கும் பாடல்கள் பாடுவது சுலபமல்ல.

அதிலும் இரு வேறு கருத்துகளும் ஒன்றிற்கொன்று எதிர்மறையாக வேறு இருக்க முடிவது கவியின் திறமைக்கு சிகரமே அல்லவா? ஆனால் பின் தொடர்ந்த காலத்தில் இது போன்ற பாடல்கள் குறைந்து தற்போது இல்லாமலே போய் விட்டன என்பது வருத்தத்திற்கு உரிய அம்சம். இன்றைய தமிழறிஞர்கள் இது போன்ற பாடல்களை வளர்க்க ஆவன செய்வார்களா?