Sunday, February 4, 2018

என் மனம் கவர்ந்த குறள்கள் சில - அறத்துப்பால்

அறத்துப்பால்

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் 
தெய்வத்துள் வைக்கப் படும்
உலகில் வாழ வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன் வானில் வாழ்வதாகச் சொல்லப்படும் தெய்வத்துக்கு இணையாக வைத்து மதிக்கப்படுவான்.

குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் 
மழலைச்சொல் கேளா தவர்
தங்கள் குழந்தைகளின் மழலைச் சொல்லைக் கேட்காதவர்கள்தான் குழலோசை, யாழோசை ஆகிய இரண்டும் இனிமையானவை என்று கூறுவார்கள்.

தந்தை மகற்காற்று நன்றி அவையத்து 
முந்தி இருப்பச் செயல்
தந்தை தன் மகனுக்குச் செய்யத்தக்க நல்லுதவி, கற்றவர் கூட்டத்தில் தன் மகன் முந்தியிருக்கும்படியாக அவனைக் கல்வியில் மேம்படச் செய்தலாகும்

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை 
என்நோற்றான் கொல்எனும் சொல்
மகன் தன் தந்தைக்குச் செய்யத் தக்க கைம்மாறு, இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும்

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் 
சான்றோன் எனக்கேட்ட தாய்
நல்ல மகனைப் பெற்றெடுத்தவள் என்று ஊரார் பாராட்டும் பொழுது அவனைப் பெற்றபொழுது அடைந்த மகிழ்ச்சியைவிட அதிக மகிழ்ச்சியை அந்தத் தாய் அடைவாள்.

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து 
மன்னுயிர்க் கெல்லாம் இனிது
பெற்றோரைக் காட்டிலும் பிள்ளைகள் அறிவிற் சிறந்து விளங்கினால், அது பெற்றோருக்கு மட்டுமேயன்றி உலகில் வாழும் அனைவருக்கும் அக மகிழ்ச்சி தருவதாகும்.

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் 
என்பும் உரியர் பிறர்க்கு
அன்பு இல்லாதவர் எல்லாப்பொருள்களையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வார்: அன்பு உடையவர் தம் உடமையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர்.

இனிய உளவாக இன்னாத கூறல் 
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று
இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது நல்ல பழம் இருக்க நச்சுக்காயை உண்பது போலாகும்.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை 
செய்ந்நன்றி கொன்ற மகற்கு
எந்த அறத்தை மறந்தார்க்கும் வாழ்வு உண்டு; ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தார்க்கு வாழ்வில்லை.

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை 
ஆரிருள் உய்த்து விடும்
அடக்கம் அழியாத புகழைக் கொடுக்கும். அடங்காமை வாழ்வையே இருளாக்கி விடும்.

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் 
செல்வர்க்கே செல்வம் தகைத்து
பணிவு என்னும் பண்பு, எல்லார்க்கும் நலம் பயக்கும். ஏற்கனவே செல்வர்களாக இருப்பவர்களுக்கு அந்தப் பண்பு, மேலும் ஒரு செல்வமாகும்.

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் 
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு
ஒருவர் எதைக் காத்திட முடியாவிட்டாலும் நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும். இல்லையேல் அவர் சொன்ன சொல்லே அவர் துன்பத்துக்குக் காரணமாகி விடும்.

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே 
நாவினாற் சுட்ட வடு
நெருப்பு சுட்ட புண்கூட ஆறி விடும்; ஆனால் வெறுப்புக் கொண்டு திட்டிய சொற்கள் விளைத்த துன்பம் ஆறவே ஆறாது.

ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் 
உயிரினும் ஓம்பப் படும்
ஒழுக்கம் ஒருவர்க்கு உயர்வு தரக் கூடியது என்பதால், அதை உயிரைக் காட்டிலும் மேலானதாக காக்க வேண்டும்.

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை 
இகழ்வார்ப் பொறுத்தல் தலை
தன்னையே தோண்டினாலும் தோண்டுபவர் விழுந்துவிடாதபடி தாங்கும் நிலம் போலத், தன்னை வார்த்தைகளால் அவமதிப்பவரையும் மதித்துப் பொறுப்பது முதன்மை அறம்.

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் 
கேடும் நினைக்கப் படும்
பொறாமைக் குணம் கொண்டவனின் வாழ்க்கை வளமாக இருப்பதும், பொறாமைக் குணம் இல்லாதவனின் வாழ்க்கை வேதனையாக இருப்பதும் வியப்புக்குரிய செய்தியாகும்.

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க 
சொல்லிற் பயனிலாச் சொல்
பயனளிக்காத சொற்களை விடுத்து மனத்தில் பதிந்து பயனளிக்கக் கூடிய சொற்களையே கூற வேண்டும்.

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு 
என்ஆற்றுங் கொல்லோ உலகு
தமக்கு நீரைத் தருகின்ற மேகங்களுக்கு உயிர்கள் என்ன கைம்மாறு (பதில் உதவி) செய்கின்றன? அதுபோல் மேகங்கள் போன்ற பெரியவர்கள் செய்கின்ற ஒப்புரவுகளும் கைம்மாறு எதிர்பார்ப்பன அல்ல.

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது 
ஊதியம் இல்லை உயிர்க்கு
ஏழைகளுக்குக் கொடுப்பது; அதனால் புகழ் பெருக வாழ்வது; இப்புகழ் அன்றி மனிதர்க்குப் பயன் வேறு ஒன்றும் இல்லை.

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் 
தோன்றலின் தோன்றாமை நன்று
எந்தத் துறையில் ஈடுபட்டாலும் அதில் புகழுடன் விளங்கவேண்டும்; இயலாதவர்கள் அந்தத் துறையில் ஈ.டுபடாமல் இருப்பதே நல்லது.

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு 
இவ்வுலகம் இல்லாகி யாங்கு
பொருள் இல்லாதவர்க்கு இப்பூவுலக இன்பம் இல்லாதது போலவே, உயிர்கள்மேல் அருள் இல்லாதவர்க்கு மேல் உலக இன்பம் இல்லை.

வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின் 
மெலியார்மேல் செல்லு மிடத்து
தன்னைவிட கீழானவர்களை, மெலிந்தவர்களைத் துன்புறுத்த நினைக்கும் போது, தன்னைவிட மேலானவர், வலியவர் முன்னால் அஞ்சி நிற்கும் நிலைமை தனக்கு இருப்பதை மறந்துவிடக் கூடாது.

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் 
தீமை இலாத சொலல்
உண்மை என்று சொல்லப்படுவது எது என்றால், எவர்க்கும் எத்தகைய தீங்கையும் தராத சொற்களைச் சொல்வதே ஆகும்.

பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த 
நன்மை பயக்கும் எனின்
குற்றமற்ற நன்மையை விளைவிக்கக் கூடுமானால் பொய்யான சொல்லும்கூட உண்மை என்று கூறத்தக்க இடத்தைப் பெற்றுவிடும்.

தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் 
தன்நெஞ்சே தன்னைச் சுடும்
மனச்சாட்சிக்கு எதிராகப் பொய் சொல்லக்கூடாது; அப்படிச் சொன்னால், சொன்னவரின் மனமே அவரைத் தண்டிக்கும்.

உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார் 
உள்ளத்து ளெல்லாம் உளன்
ஒருவன் தன் உள்ளம் அறியப் பொய் இல்லாமல் நடப்பானானால் அத்தகையவன் உலகத்தாரின் உள்ளங்களில் எல்லாம் இருப்பவனாவான்.

புறள்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை 
வாய்மையால் காணப் படும்
நீரில் குளிப்பதால் உடலின் அழுக்கு மட்டுமே நீங்கும்; மனம் அழுக்குப்படாமல் தூய்மையுடன் விளங்கிட, சொல்லிலும் செயலிலும் உண்மை வேண்டும்.

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் 
பொய்யா விளக்கே விளக்கு
(புறத்தில் உள்ள இருளை நீக்கும்) விளக்குகள் எல்லாம் விளக்குகள் அல்ல, சான்றோர்க்கு (அகத்து இருள் நீக்கும்) பொய்யாமையாகிய விளக்கே விளக்கு ஆகும்.

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால் 
தன்னையே கொல்லுஞ் சினம்
ஒருவன் தன்னைத்தானே காத்துக் கொள்ள வேண்டுமானால், சினத்தைக் கைவிட வேண்டும். இல்லையேல் சினம், அவனை அழித்துவிடும்.

சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் 
ஏமப் புணையைச் சுடும்
சினங்கொண்டவரை அழிக்கக் கூடியதாகச் சினமென்னும் தீயே இருப்பதால், அது அவரை மட்டுமின்றி, அவரைப் பாதுகாக்கும் தோணி போன்ற சுற்றத்தையும் அழித்துவிடும்.

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண 
நன்னயஞ் செய்து விடல்
நமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டிப்பதற்குச் சரியான வழி, அவர் வெட்கித் தலைகுனியும்படியாக அவருக்கு நன்மை செய்வதுதான்.

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா 
பிற்பகல் தாமே வரும்
அடுத்தவர்க்குத் தீமையைக் காலையில் செய்தால், நமக்குத் தீமை நம்மைத் தேடி மாலையில் தானாக வரும்.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் 
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை
இருப்பதைப் பகிர்ந்து உண்டு, பல உயிர்களையும் பாதுகாப்பது, நூல் எழுதியவர்கள் தொகுத்த அறங்களுள் எல்லாம் முதன்மையான அறமாகும்.

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் 
பற்றுக பற்று விடற்கு

எதிலும் பற்றில்லாதவராக யார் இருக்கிறாரோ அவரிடம் மட்டும் பற்றுக் கொள்ள வேண்டும். துறவறத்தினர் தம் பற்றுகளை விட்டொழிப்பதற்கு அத்தகையோரிடம் கொள்ளும் பற்றுதான் துணை நிற்கும்.