Tuesday, May 8, 2018

திருவாசகம் எனும் தேன்


வான் கலந்த மாணிக்க வாசக! நின் வாசகத்தை
நான் கலந்து பாடுங்கால்: நற்கருப்பஞ் சாற்றினிலே
தேன் கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்து
ஊன் கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே
என்று அருட்ஜோதி இராமலிங்க வள்ளலாரால் உருகி உருகிப் பாராட்டப்பெறும் மாணிக்கவாசகர்.
திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்பது மகாவாக்கியம். கல் நெஞ்சம் கொண்டாரையும் உருகச் செய்யும், நெகிழ்ந்து கரைய வைக்கும் பாக்கள் அவை.

திருக்கோத்தும்பி

கோத்தும்பி என்பது அரச வண்டு என்று பொருள்படும். அரச வண்டை அழைத்து, ‘இறைவன் திருவடிக்கமலத்தில் சென்று ஊதுவாய்’ என்று கூறுவது போலப் பாடப்பட்டுள்ளது

"பூவேறு கோனும் புரந்தரனும் பொற்பமைந்த
நாவேறு செல்வியும் நாரணனும் நான்மறையும்
மாவேறு சோதியும் வானவருந் தாமறியாச்
சேவேறு சேவடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ "
பொருள் விளக்கம்: கோத்தும்பீ - அரச வண்டே! பூ ஏறு கோனும் - தாமரை மலரில் ஏறி அமர்ந்துள்ள பிரமனும், புரந்தரனும் - இந்திரனும், பொற்பு அமைந்த - அழகு அமைந்த, நா ஏறு செல்வியும் - பிரமனது நாவில் தங்கிய கலைமகளும், நாரணனும் - திருமாலும், நான்மறையும் - நான்கு வேதங்களும், மாவேறு சோதியும் - பெருமை மிகுந்த ஒளி வடிவினனாகிய உருத்திரனும், வானவரும் - மற்றுமுள்ள தேவர்களும், தாம் அறியா - தாம் அறியாவொண்ணாத, சே ஏறு சேவடிக்கே - இடப வாகனத்தில் ஏறுகின்ற சிவபெருமானுடைய திருவடிக் கண்ணே, சென்று ஊதாய் - போய் ஊதுவாயாக.

"நானார்என் உள்ளமார் ஞானங்க ளார்என்னை யாரறிவார்
வானோர் பிரான்என்னை ஆண்டிலனேல் மதிமயங்கி
ஊனார் உடைதலையில் உண்பலிதேர் அம்பலவன்
தேனார் கமலமே சென்றூதாய் கோத்தும்பீ"
பொருள் விளக்கம்: கோத்தும்பீ - அரச வண்டே! வானோர் பிரான் - தேவர் பெருமான், மதி மயங்கி - பேரருள் காரணமாக மனமிரங்கி, என்னை ஆண்டிலனேல் - என்னை ஆண்டருளாவிடின், நான் ஆர் - நான் என்ன தன்மையுடையவனாயிருப்பேன், என் உள்ளம் ஆர் - என் உள்ளம் என்ன தன்மையுடையதாயிருக்கும். ஞானங்கள் ஆர் - என் அறிவு எத்தன்மைய தாயிருக்கும், என்னை யார் அறிவார் - என்னைப்பற்றி யார் தெரிந்து கொள்ளப் போகிறார்கள், ஆதலின், ஊன் ஆர் உடைதலையில் மாமிசம் பொருந்திய உடைந்த தலை ஓட்டில், உண்பலி தேர் - உண்ணுதற்குரிய பிச்சையை ஏற்கின்ற, அம்பலவன் - அம்பலவாணனது, தேன் ஆர் கமலமே - தேன் நிறைந்த தாமரை போன்ற திருவடியின்கண்ணே, சென்று ஊதாய் - போய் ஊதுவாயாக.

இளையராஜாவின் இசையில் இந்த பாடலை சிம்பொனி வடிவில் கேட்டால், அதை விட வேறு ஆனந்தம் இல்லை

https://www.youtube.com/watch?v=fr8mTh6jEwU

Monday, May 7, 2018

ஒளவையாருக்கும் கம்பருக்கும் நடந்த இலக்கியச் சண்டை

“” ஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த "அம்பர்" என்ற ஒரு ஊரின் ஒரு தெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்தத் தெருவிலிருந்த ஒரு வீட்டின் திண்ணையில் சற்றே அமர்ந்தார்.
அந்தக் காலத்தில் இன்றுள்ளது போல் பேருந்துகளோ மற்ற மோட்டார் வாகனங்களோ கிடையாது. ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்குச் செல்ல வேண்டுமென்றால் நடந்தோ, குதிரை மீதோ அல்லது குதிரை அல்லது மாட்டு வண்டியிலோ தான் செல்ல வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் வழிப்போக்கர்கள் இளைப்பாறிச் செல்வதற்காகவென்றே திண்ணை இருக்கும்.
ஔவையார் அமர்ந்த திண்ணையக் கொண்ட வீட்டில் "சிலம்பி" என்ற தாசி இருந்தாள். தன் வீட்டின் திண்ணையில் ஒரு மூதாட்டி அமர்ந்திருப்பதைக் கண்ட சிலம்பி தான் குடிப்பதற்காக வைத்திருந்த கூழைக் கொணர்ந்து ஔவையாருக்குக் கொடுத்தாள்.
கூழை அருந்திய ஔவையார் அந்த வீட்டின் சுவற்றிலே கரிக் கட்டியினால் எழுதியிருந்த இரண்டு வரிகளைக் கவனித்தார்:
"தண்ணீருங் காவிரியே தார் வேந்தன் சோழனே
மண்ணாவதுஞ் சோழ மண்டலமே"
தனக்குப் பசியாரக் கூழ் கொடுத்த சிலம்பியை நோக்கி, "இது என்ன?" என்று கேட்டார் ஔவையார்.
"குலோத்துங்க சோழ மன்னனின் அவைக்களப் புலவரான கம்பர் வாயால் பாடல் பெற்றவர்கள் மிகவும் சீரோடும் சிறப்போடும் வாழ்வதாகக் கேள்விப்பட்டு நான் சேர்த்து வைத்திருந்த 500 பொற்காசுகளைக் கொடுத்து என் மீது ஒரு பாடல் பாட வேண்டுமென்று அவரைக் கேட்டுக் கொண்டேன். அதற்குக் கம்பர், 'ஒரு பாடலுக்கு ஆயிரம் பொன் தர வேண்டுமென்றும் 500 பொன்னுக்கு அரைப் பாடல் தான் கிடைக்கும்' என்றும் கூறிக் கரிக் கட்டியால் இவ்விரண்டு வாரிகளைச் சுவற்றில் எழுதிவிட்டுப் போய்விட்டார். கையிலிருந்த 500 பொன்னும் பறிபோனதால் நான் அன்றிலிருந்து வறுமையில் வாடுகிறேன்." என்று கூறினாள் சிலம்பி.
அதைக் கேட்ட ஔவையார் உடனே ஒரு காரித்துண்டினை எடுத்து அவ்விரண்டு வாரிகளின் கீழே கீழ்க்கண்ட வரிகளைச் சேர்த்துக் கவிதையைப் பூர்த்தி செய்தார்:
பெண்ணாவாள் அம்பர்ச் சிலம்பி அரவிந்தத் தாளணியும்
செம்பொற் சிலம்பே சிலம்பு
என்பதாகும் அவ்வரிகள்.
இதையும் சேர்த்து முழுப்பாடலாக,
"தண்ணீருங் காவிரியே தார்வேந்தன் சோழனே
மண்ணாவ துஞ்சோழ மண்டலமே - பெண்ணாவாள்
அம்பர்ச் சிலம்பி அரவிந்தத் தாளணியும்
செம்பொற் சிலம்பே சிலம்பு "
என்பதாகும்.
ஔவையார் வாயால் பாடல் பெற்றதும் சிலம்பியின் புகழ் நாடெங்கும் பரவியது. அவள் கால்களில் செம்பொன்னிலான சிலம்பணியுமளவிற்குப் பெரிய செல்வச் சீமாட்டியாக ஆனாள்.
தான் 500 பொன் பெற்று ஏழையாக்கிய சிலம்பியை ஔவையார் கூழுக்குப் பாடிச் செல்வச் செழிப்பு மிக்கவளாக்கி விட்டதைக் கேள்வியுற்ற கம்பர் ஔவையார் மீது துவேஷம் கொண்டார். ஒரு நாள் ஔவையார் அரசவைக்கு வருகை தந்தார். அப்பொழுது கம்பர் அவரை நோக்கி ஆரைக் கீரைக்கும் ஔவைக்கும் சிலேடையாக அதாவது இரு பொருள் படும் படியாக ஔவையையும் ஆரக்கீரையையும் ஒப்பிட்டு,
"ஒரு காலடீ, நாலிலைப் பந்தலடீ"
என்று மரியாதை இல்லாமல் இரட்டுறமொழிதல் விடுகதை கூறினார். இதற்கு பதிலாக ஔவையார்,
"எட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே
மட்டில் பெரியம்மை வாகனமே முட்டமேற்க்
கூறையில்லா வீடே, குலராமன் தூதுவனே
ஆரையடா சொன்னாயது."
தமிழில் "அ" அன்பது எண் 8 ஐக் குறிக்கும் "வ" 1/4 ஐக் குறிக்கும். 8, 1/4 இரண்டையும் சேர்த்தால் "அவ" என வரும்.
எட்டேகால் லட்சணமே என்றால் "அவ லட்சணமே" எனப் பொருள் படும். எமனேறும் பரி எருமை. எமனேறும் பரியே என்றால் "எருமையே" எனப் பொருள் படும். மட்டில் பெரியம்மை வாகனமே என்றால் "மூதேவியின் வாகனமே" என்று பொருள். கூரையில்லா வீடு குட்டிச் சுவர். கூரையில்லா வீடே என்றால் "குட்டிச் சுவரே" என்று பொருள்.
"குலராமன் தூதுவனே" என்றால், ராமாயணத்தை எழுதியவனே என்றும், ராமனுக்குத் தூது சென்ற ஹனுமானான "குரங்கே" என்றும் பொருள் படும். "ஆரையடா சொன்னாயது" என்றால் நீ சொன்னதன் பொருள் ஆரக்கீரை யென்றும் யாரைப் பார்த்து இப்படிச் சொன்னாய் என்றும் இருபொருள் படும். இத்துடன் "அடா" என்ற அடைமொழி சேர்த்துத் தன்னை "அடி" என்றதற்குப் பதிலடி கொடுத்தார்.
எவ்வளவு அருமையான புலமை விளையாட்டு பார்த்தீர்களா !! “”

Thursday, May 3, 2018

காளமேகப் புலவரின் சிலேடைப் பாடல்கள்


தமிழின் "க' என்ற எழுத்து மட்டுமே கொண்ட பாடலை கவி காளமேகத்தைப் பாடச்சொல்ல, காண்பவர் ஆச்சர்யப்பட, பாடலை அருவியெனக் கொட்டுகிறார்.
"காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
கோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்க - கைக்கைக்குக்
காக்கைக்குக் கைக்கைக்கா கா"
(கூகை - ஆந்தை. காக்கையானது பகலில் கூகையை (ஆந்தையை) வெல்ல முடியும். கூகையானது இரவில் காக்கையை வெல்லமுடியும். கோ எனும் அரசன் பகைவரிடத்திலிருந்து தம் நாட்டை இரவில் ஆந்தையைப் போலவும், பகலில் காக்கையைப் போலவும் காக்கவேண்டும். எதிரியின் பலவீனமறிந்து, கொக்கு காத்திருப்பது போல தக்க நேரம் வரும் காத்திருந்து தாக்க வேண்டும். தகுதியற்ற காலம் எனில் தகுதியான அரசனுக்குக் கூட (கைக்கு ஐக்கு ஆகா) கையாலாகிவிடக்கூடும்).
அதே போல 'த' எனும் எழுத்து மட்டும் கொண்ட பாடலை ஒருவர் பாடச் சொல்கிறார். கார்மேகமானது கொட்டும் மழையைப் போல பாடலைக் கொட்டுகின்றார் காளமேகம்.
"தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி
துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி
தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த
தெத்தாதோ தித்தித்த தாது?"
தத்தி தாவி பூவிலிருக்கும் தாதுவாகிய மகரந்தத் தூளை திண்ணும் வண்டே, ஒரு பூவினுள் உள்ள தாதுவை உண்ட பின் மீண்டும் ஒரு பூவினுக்குள் சென்று தாதெடுத்து உண்ணுகிறாய், உனக்கு (எத்தாது) எந்தப் பூவிலுள்ள தேன் (இனித்தது) தித்தித்தது?) என்னே அழகிய விதத்தில் பாடியுள்ளார்?!

வருமானமும் செலவும் குறித்து தெய்வப் புலவர் வள்ளுவரும், தமிழ் மூதாட்டி அவ்வையும் கூறியது


"அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்"
தன் வருமானமறிந்து, சொத்தின் மதிப்பை அறிந்து அதற்கு ஏற்ப வாழாதவனின் வாழ்க்கை, நிறைய இருப்பது போல் காட்சி தந்து ஒன்றுமே இல்லாமல் அழிந்துவிடும்.
"ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை"
வரும் வருமானம் குறைவாக இருந்தாலும் ஆடம்பரச் செலவு அதிகமாக இல்லையென்றால் அவர் வாழ்வில் கெடுதி இல்லை.
"ஆன முதலில் அதிகம் செலவானால்
மானமழிந்து மதிகெட்டு போன திசை
எல்லார்க்கும் கள்ளனாய் எழுபிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லானாம் நாடு"
"நல்வழி" என்னும் நூளில் ஔவையார் எழுதிய பாடல் இது...
விளக்கம்:
ஈட்டும் பொருளினைவிட அதிகமாக செலவு செய்பவர்கள் பிற்காலத்தில் தங்கள் மானத்தையும், அறிவினையும், உணர்வையும் இழப்பார்கள்... அவர்கள் எவ்வழி நடந்தாலும் திருடர்கள் போல நடத்தப்படுவர்... எத்துனை பிறப்பு பிறந்தாலும் எவ்வித மரியாதையும் கொடுக்கப்படாமல் தீயவர் போல நடத்தப்படுவர்.

Wednesday, May 2, 2018

கடவுள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்?

கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற கேள்வியைத் தாண்டி, உலகில் கடவுள் நம்பிக்கை உள்ள  அனைவரும் தினமும் வணங்கும் கடவுள் உண்மையிலேயே எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்று நாம் யோசித்துப் பார்த்ததுண்டா? எத்தனை மதங்கள், எத்தனை வழிபாட்டு முறைகள், எத்தனை நம்பிக்கைகள், இவை அத்தனையும் கடவுள் கேட்டுக்கொண்டிருகிறாரா? ஆம் என்றால் எந்த முறை சரியானது? இந்த கேள்வி என்னுள்ளே கேட்ட பொழுது, நான் தொடர்ந்து சிந்தித்த, என்னுடைய சில தனிப்பட்ட கருத்துக்களை கூறுகிறேன்.
கடவுள் இருக்கிறாரா என்றால் ஆம் இருக்கிறார் என்று கூறுகிறேன், இல்லாவிட்டால் இந்த உயிர், உலகம், அண்டம் எவ்வாறு சீராக இயங்குகிறது? இவை அனைத்தையும் தோற்றுவித்தது யார்? அவர் தான் கடவுள், அவரை நாம் இயற்கை என்றோ, அறிவியல் என்றோ, சிவன், விஷ்ணு, பிரம்மா, ஏசு, அல்லா, புத்தர்  என்றோ,  வெவ்வேறு பெயர்களில் அழைக்கிறோம். அனால் அவர் ஒருவரே, அவர் அனைத்து உயிர்களுக்கும் பொதுவானவர். இந்த மதங்கள், வழிபாட்டு முறைகள் அனைத்தும் மனிதனால் உருவாக்கப் பட்டவை. மனிதன் ஏன் மதத்தை உருவாக்கினான் என்றால், காட்டு மிராண்டிகளாக வாழ்ந்து கொண்டு, எதற்கும் அஞ்சாமல் உடல் பலத்தால் அனைத்தையும் சாதித்து விடலாம் என்று வாழ்ந்த மனிதனை, நமக்கு மேலே கடவுள் ஒருவன் இருக்கிறான், அவன் இதை பார்த்துக்கொண்டிருக்கிறான், நாளை நீ அவனுக்கு பதில் சொல்லியாக வேண்டும் என்று பயத்தை ஏற்படுத்தி ஒழுக்கத்துடனும், அன்புடனும், உண்மையாகவும் வாழ்வதற்காக உலகின் வெவேறு பகுதிகளில் வெவேறான வடிவத்தில் மனிதனால் கற்பனையாக தோற்றுவிக்கப் பட்டதே இத்தனை மதங்கள்.
அப்படியென்றால் இறப்பிற்குப் பிறகு பாவ புண்ணியத்திற்கு ஏற்றவாறு எந்த தண்டனையும் கிடைக்காதா, சொர்க்கம், நரகம், மறுமை நாள், அனைத்தும் பொய்யா என்றால், அதன் பதில் அது ஒரு உண்மையான பொய், அதை தான் வள்ளுவர்
"பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்"
என்று கூறியுள்ளார், அது பொய்யாக இருந்தாலும் நன்மையை விளைவிக்கும் நோக்கத்தில் சொல்லப் பட்டதால் அது உண்மையாகவே கருதப்படும்.
பிற உயிர்களின் மேல் காட்டும் அன்பு தான் கடவுள், நாம் பேசக்கூடிய உண்மை தான் கடவுள், நாம் பிறருக்கு செய்யக்கூடிய உதவி தான் கடவுள், கடவுள் வேறு எங்கும் இல்லை நம் உள்ளே தான் இருக்கிறார், இதைத்தான் சித்தர்கள் பின்வருமாறு பாடியுள்ளனர்.
"ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த சோதியை
நாடி நாடி நாடிநாடி நாட்களும் கழிந்துபோய்
வாடி வாடி வாடிவாடி மாண்டுபோன மாந்தர்கள்
கோடிகோடி கோடிகோடி எண்ணிறந்த கோடியே"
உன்னுள்ளே கலந்துவிட்ட கடவுளைக் காணாமல் வெளியே தேடித்தேடி, கிடைக்காமல் இறந்துபோன மனிதர்கள் எண்ணற்ற கோடி என்கிறார்.
மேலும் கீழே உள்ள பாடலைப் பாருங்கள்
"நட்டகல்லைத் தெய்வமென்று நாலுபுஷ்பந் சாத்தியே
சுற்றிவந்து முணமுணென்று சொல்லு மந்திரம் ஏதடா
நட்டகல்லும் பேசுமோ நாதனுள் ளிருக்கையில்
சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ"
சிலையை தெய்வமாக பூக்களால் அலங்கரித்து மந்திரம் கூறி வணங்குகிறாயே அந்த சிலை உன்னுடன் பேசுமா? இறைவனை உனக்குள்ளே இருக்கையில் அதை அறியாமல் இவ்வாறு செய்கிறாயே, அது எதை போல உள்ளதென்றால் ஒரு சுட்ட மண் சட்டியில் கறி சமைக்கிறாய், அந்த சட்டி அதன் சுவையை உணர முடியுமா? என்று கேட்கிறார்.
இதற்கு முடிவு தான் என்ன? நாம் கடவுளை நம் மதத்தின் அடிப்படையில் வணங்கக் கூடாதா? அது தவறா? என்றால், இல்லை அது தவறே இல்லை, அது ஒரு வழிமுறை தான், நம் கடவுளை அந்த உருவில் கண்டு, அந்தந்த வழியில் சென்று வணங்குகிறோம், இப்போது மதுரையிலிருந்து சென்னைக்கு செல்ல வேண்டும், நாம் திண்டுக்கல் வழியாகச் செல்லலாம், திருச்சி வழியாகச் செல்லலாம், அல்லது வேறு ஏதாவது புதிய வழிகளில் செல்லலாம் ஆனால் நாம் சென்று சேர வேண்டிய இடம் சென்னை தான், அது போல் தான் இந்த மதங்களும், ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு பாதையைப் போன்றது, நாம் இறுதியில் இறைவனைத் தான் சென்று சேருகிறோம்.
இதை உணர்ந்தால் நமக்குள் என் மதம் தான் உயர்ந்தது, உன் மதம் தான் உயர்ந்தது என்ற மத சண்டையே வராது. அனைத்து மதங்களின் நோக்கம் ஒன்று தான் சாராம்சம் ஒன்று தான் வழிகள் தான் வேறு.
பிற உயிர்களின் மேல் அன்பு காட்டுங்கள்,  உண்மையே பேசுங்கள், பிறருக்கு இயன்ற அளவில்  உதவி செய்யுங்கள், கடவுள் வேறு எங்கும் இல்லை நம் உள்ளே தான் இருக்கிறார்.
உளமே கடவுள், ஊணுடம்பே ஆலயம்.