Sunday, January 28, 2018

தமிழ் மூதாட்டி அவ்வையின் எக்காலத்திற்கும் பொருந்தும் நற்பாடல்கள் சில

அவ்வையார் நூல்கள்

மூதுரை


நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந் நன்றி
'என்று தருங்கொல்?' என வேண்டா- நின்று
தளரா வளர் தெங்கு தாள் உண்ட நீரைத்
தலையாலே தான் தருதலால்.

1
தென்னைமரம் தன் கால்களில் நீரை உண்டுவிட்டுத் தலையால் இளநீரைத் தரும். அதுபோல ஒருவர் செய்த உதவி நன்றியாகத் தானே வந்து சேறும். என்று தருவார் என்று காத்திருக்கக் கூடாது. 


நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மேல் எழுத்துப் போல் காணுமே- அல்லாத
ஈரமிலா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம்
நீர் மேல் எழுத்துக்கு நேர்.

2
நெஞ்சில் ஈரம் உள்ள நல்லவர்க்கு உதவி செய்தால் அது அவர்களின் நெஞ்சில் கல்லில் பொளித்து எழுதிய எழுத்துப் போல அழியாமல் நிலைத்திருக்கும். நெஞ்சில் ஈரமில்லாதவர்களுக்கு உதவினால் அவர்கள் அதனைத் தண்ணீரில் எழுதும் எழுத்து எழுதும்போதே மறைந்துவிடுவது போல அப்போதே மறந்துவிடுவார்கள். 

அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவளாய்
நட்டாலும் நண்பு அல்லார் நண்பு அல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்.

4
காய்ச்சினாலும் பால் சுவை குன்றாது. அதுபோல நல்ல நண்பர்கள் நட்பால் துன்பம் அடைந்தாலும் விலகமாட்டார்கள். நன்னட்பு இல்லாதவர் துன்பம் வரும் காலத்தில் மாறிவிடுவர். வெள்ளை நிறம் கொண்ட சங்கு சுட்டாலும் சுண்ணாம்பாக மாறி வீட்டில் அடிக்கும்போது வெள்ளை நிறத்தையே தரும். அதுபோல வறுமையுற்றுக் கெட்டுப்போனாலும் மேன்மக்கள் மேன்மக்களாகவே திகழ்வர். 


அடுத்து முயன்றாலும் ஆகும் நாள் அன்றி
எடுத்த கருமங்கள் ஆகா-தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்
பருவத்தால் அன்றிப் பழா.

5
எவ்வளவு பெரிய ஓங்கி உயர்ந்த மரமானாலும் அதன் பருவ காலத்தில்தான் பழுக்கும். அதுபோல அடுத்தடுத்து முயன்றாலும் செயல் நிறைவேற வேண்டிய காலம் வந்தால்தான் நாம் எடுத்துத் தொடுத்த (தொடங்கிய) செயல் நிறைவேறும். 


நல்லாரைக் காண்பதுவும் நன்றே; நலம்மிக்க
நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே-நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று.

8
நல்லவர்களைக் காண்பதுவும் நல்லது. நல்லவர்களின் சொல் நன்மை மிகுந்திருக்கும். எனவே அதனைக் காதால் கேட்பதும் நல்லது. நல்லவர்களின் நற்குணங்களை பிறருக்கு எடுத்துச் சொல்வதும் நல்லது. நல்லவர்களோடு சேர்ந்திருப்பதும் நல்லது. 


தீயாரைக் காண்பதுவும் தீதே; திரு அற்ற
தீயார் சொல் கேட்பதுவும் தீதே-தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது.

9
தீயவர்களைக் கண்ணில் காண்பதுவும் தீது. யாவரும் விரும்பும் தன்மை இல்லாத தீயவர்களின் சொல்லைக் காதால் கேட்பதுவும் தீது. தீயவர் ஒருவரின் குணத்தை வேறொருவரிடம் சொல்வதும் தீது. தீயவரோடு நட்புக் கொண்டிருப்பதும் தீது. 


நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்-தொல் உலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை.

10
நல்லவர் ஒருவர் இருந்தால் அவருக்காக மழை பொழியும். மழை போன்ற கொடை வழங்கப்படும். இறையருளால் வழங்கப்படும். அந்த மழை நல்லவர் அல்லாதவருக்கும் பயன்படும். எப்படி? உழவன் நெல்லம்பயிருக்கு நீர் இறைக்கிறான். அந்த நீர் வாய்க்காலின் வழியே ஓடுகிறது. வாய்க்கால் கரையில் உள்ள புல்லுக்கும் அந்த நீர் உதவுகிறது. அதுபோல இறையாற்றல் நல்லவருக்கு வழங்கும் கொடை அல்லாதவருக்கும் பயன்படும். இதுதான் உலக இயற்கை. தீயவர் நலம் பெறுவது இதனால்தான். 

கான மயில் ஆடக் கண்டிருந்த வான் கோழி
தானும் அதுவாகப் பாவித்து-தானும் தன்
பொல்லாச் சிறகை விரித்து ஆடினால் போலுமே
கல்லாதான் கற்ற கவி.

14
காட்டிலே மயில் ஆடுவதைப் பார்த்த வான்கோழிதன்னையும் அந்த மயிலாகப் பாவனை செய்துகொண்டு, தன் பொலிவு இல்லாத சிறகுகளை விரித்துஆடினால் எப்படி இருக்குமோ, அப்படி இருக்கிறது கல்வி அறிவு இல்லாத ஒருவன் கற்றறிந்தவன் பாட்டைக் கேட்டுப் பழகிக்கொண்டு பாடுவது. (கற்றவன் பாடலுக்கு உரிய ஆழ்ந்த பொருளைச் சொல்ல முடியும். கல்லாதவன் சொல்லமுடியுமா) 


அடக்கம் உடையார் அறிவிலர் என்று எண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா-மடைத் தலையில்
ஓடுமீன் ஓட உறுமீன் வரும் அளவும்
வாடி இருக்குமாம் கொக்கு.

16
தன்னடக்கத்துடன் இருப்பவரைப் பார்த்து “இவர் அறிவில்லாதவர்” என்று எண்ணி அவரை வெல்ல நினைக்கவும் கூடாது. நீர் பாயும் மடை வாயிலில் சிறிய மீன்கள் ஓடும்போது வாட்டத்துடன் பார்த்துக்கொண்டிருக்கும் கொக்கு பெரிய மீன்வந்ததும் கௌவிக்கொள்வது போன்றது வலிமை உடையவரின் அடக்கம் என உணர்ந்துகொள்ள வேண்டும். 

அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வார் உறவு அல்லர்; -அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறவார் உறவு.

17
நீர் அற்றுப்போன குளத்தை விட்டு நீர்ப்பறவைகள் நீங்கிவிடும். அதுபோலத் துன்பம் வந்த காலத்திலில் விலகிப் போய்விடுபவர் உறவினர் ஆகமாட்டார். நீர் அற்றுப்போனாலும் அந்தக் குளத்தில் கொட்டி, ஆம்பல், நெய்தல் போன்ற பூக்கொடிகள் ஒட்டிக்கொண்டே இருப்பது போலத் துன்பம் வந்த காலத்திலும் துணைநின்று உதவுபவரே உறவுக்காரர் ஆவார். 

ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல் நீர்
நாழி முகவாது நானாழி-தோழி
நிதியும் கணவனும் நேர் படினும் தம்தம்
விதியின் பயனே பயன்.

19
ஆழமான கடலில் அளவற்ற நீர் இருக்கிறது. படி ஒன்றை அதில் அமுக்கி அமுக்கி மொண்டாலும் நாலு படி நீரை அந்தப் படியால் முகந்துகொள்ள முடியாது. அதுபோலத்தான் துய்க்கும் வாழ்க்கை அளவும் இருக்கும். அது விதியின் பயன். விதியின் அளவு. ஏராளமான செல்வம் இருந்தாலும் அத்தனையும் அனுபவிக்க முடியுமா? நல்ல கணவன் இருந்தாலும் அனுபவிக்க முடியுமா? 

உடன் பிறந்தார் சுற்றத்தார் என்று இருக்க வேண்டா
உடன் பிறந்தே கொல்லும் வியாதி-உடன் பிறவா
மாமலையில் உள்ள மருந்தே பிணி தீர்க்கும்
அம் மருந்து போல் வாரும் உண்டு.
20
உடன் பிறந்தவர் மட்டுமே சுற்றத்தார் என்று நினைத்துக்கொண்டு இருக்க வேண்டியது இல்லை. சர்க்கரை-நோய் போன்ற சில வியாதிகள் நாம் பிறக்கும்போதே நம்முடன் சேர்ந்தே பிறந்து நம்மைக் கொல்கின்றன. நம்முடன் பிறக்காமல், பெரிய மலையில் எங்கோ பிறந்து வளர்ந்த மூலிகை, இடையிலே நம்மை வந்து தாக்கும் பிணியைப் போக்குகின்றன. இந்த மருந்து போன்றவர்களும் நம்முடன் இருக்கிறார்கள். 


இல்லாள் அகத்து இருக்க இல்லாதது ஒன்று இல்லை
இல்லாளும் இல்லாளே ஆமாயின்-இல்லாள்
வலி கிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்இல்
புலி கிடந்த தூறாய் விடும்.

21
மனைவி வீட்டில் இருந்தால், கணவனுக்கு இல்லாத பொருள் ஒன்றுமே இல்லை. எல்லாம் அவளாக இருந்து பயன்படுவாள். அந்த மனைவி பண்பு இல்லாதவளாக இருந்தால், எதற்கெடுத்தாலும் முரண்பாடாகவே பேசிக்கொண்டிருந்தால், அந்த நிலையில் அவன் வாழும் வீடு புலி பதுங்கியிருக்கும் புதராக மாறிவிடும். 


நற்றாமரைக் கயத்தில் நல் அன்னம் சேர்ந்தார் போல்
கற்றாரைக் கற்றாரே காமுறுவர்-கற்பிலா
மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டில்
காக்கை உகக்கும் பிணம்.

24
அன்னம் தாமரை பூக்கும் குளத்துக்குப் போய்ச் சேரும். அது போலக் கற்றாரைக் கற்றார் விரும்பி ஒன்றுசேர்வர். பிணத்தை எரிக்காமலும் புதைக்காமலும் போடும் முதுகாட்டிற்கு விரும்பிச் சென்று காக்கை பிணத்தை உண்ணும். அதுபோலக் கல்வி அறிவு இல்லாத மூர்க்கரை மூர்க்கரே விரும்பிச் சென்று சேர்ந்துகொள்வார்கள். கற்பு = கற்றல். 


மன்னனும் மாசு அறக் கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்பு உடையன்-மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பு இல்லை கற்றோர்க்குச்
சென்ற இடம் எல்லாம் சிறப்பு.

26
மன்னனையும் மாசு போகக் கற்றவனையும் சீர்தூக்கிப் பார்த்தால் மன்னனைக் காட்டிலும் கற்றவன் சிற்றப்புடையவன். எப்படி என்றால், மன்னனுக்கு அவனது ஆட்சிக்கு உட்பட்ட நாட்டில் மட்டுமே சிறப்பு. கற்றவனுக்கோ அவன் சென்ற இடத்திலெல்லாம் சிறப்பு. 


கல்லாத மாந்தர்க்குக் கற்று உணர்ந்தார் சொல் கூற்றம்
அல்லாத மாந்தர்க்கு அறம் கூற்றம்-மெல்லிய
வாழைக்குத் தான் ஈன்ற காய் கூற்றம் கூற்றமே
இல்லிற்கு இசைந்து ஒழுகாப் பெண்.

27
படிப்பறிவு இல்லாதவர்களுக்குப் படித்தறிந்தவர் சொல்லும் சொல் கூற்றம். அறநெறியைப் பின்பற்றாதவர்களுக்கு பிறர் பின்பற்றும் அறநெறி கூற்றம். வாழை மரத்துக்குத் தான் ஈன்ற காய் கூற்றம். இல்லத்தாரோடு சேர்ந்துபோகாமல் முரண்பட்டு நிற்கும் பெண் நல்வாழ்வுக்குக் கூற்றம். கூற்றம் = சாகடிக்கும் தெய்வம். 



நல்வழி

சாதி இரண்டொழிய வேறில்லை; சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் -மேதினியில்
இட்டார் பெரியோர்; இடாதார்இழி குலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி.

2
பட்டறிவு கண்டு வைத்துள்ளபடியும், நீதி தவறாத நெறிமுறைப்படியும் பறைசாற்றினால், இந்த உலகில் இருப்பவை இரண்டே சாதியைத் தவிர வேறு இல்லை. இல்லாதவர்களுக்குக் கொடுப்பவர்கள் பெரியோர் ஆவர். அவர்கள் உயர்ந்த சாதி. கொடுக்காதவர்கள் தாழ்ந்த சாதி. 


ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவாரோ? மாநிலத்தீர் - வேண்டாம்
"நமக்கும் அது வழியே; நாம் போம் அளவும்
எமக்கு என்" என்று இட்டு உண்டு இரும்.

10
இறந்தவரை எண்ணி ஆண்டுக்கணக்கில் அழுது புரண்டாலும், இறந்தவரின் நினைவுநாள் ஆண்டு அண்டு தோறும் வரும்போதெல்லாம் இறந்தவரை நினைத்துக்கொண்டு அழுது அழுது புரண்டாலும், மாண்டுபோனவர் திரும்பி வருவது இல்லை. மாயிலத்தில் உள்ளவர்களே! அழவேண்டா. நமக்கும் அவர் போன அதே வழிதான். எனவே, எனக்கு இவை எதற்கு என்று எண்ணி மற்றவர்களுக்கு உணவிட்டுத் தானும் உண்டு வாழ்ந்துகொண்டிருங்கள். நாம் போகும் வரை இட்டும் உண்டும் வாழ்ந்துகொண்டிருங்கள். 


ஆற்றங் கரையின் மரமும் அரசு அறிய
வீற்றிருந்த வாழ்வும் வீழும் அன்றே - ஏற்றம்
உழுது உண்டு வாழ்வதற்கு ஒப்பு இல்லை கண்டீர்
பழுது உண்டு வேறு ஓர் பணிக்கு.

12
ஆற்றங்கரையில் ஆற்றுநீரை உண்டுகொண்டு வளமோடு இருந்த மரமும் ஒருநாள் விழுந்துவிடும். அரசனே எண்ணிப் பார்க்கும்படி பெருமிதத்தோடு வாழ்ந்த வாழ்வும் ஒருநாள் விழுந்துவிடும். பின் எதுதான் விழாது என்கிறீர்களா? உழுது, அதன் விளைச்சலை உண்டு வாழ்தலே ஏற்றம். பெருமை. இதற்கு ஒப்பான வாழ்வு வேறு எதுவும் இல்லை. வேறு எந்தப் பணியாக இருந்தாலும் அதற்குப் பழுது உண்டு. 

பிச்சைக்கு மூத்தகுடி வாழ்க்கை பேசுங்கால்
இச்சை பல சொல்லி இடித்து உண்கை - சீச்சி
வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது
உயிர் விடுகை சால உறும்.

14
பிச்சை எடுக்கும் வாழ்க்கை மிகமிக இழிவு. அந்த வாழ்க்கைக்கு மூத்த குடிவாழ்க்கை எது தெரியுமா? சொல்கிறேன் கேள். பலப்பல ஆசைகளைக் காட்டி கேட்போர் மனத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக இடித்து நப்பாசை கொள்ளும்படிச் செய்து அவர்கள் தரும் பொருளால் தன் வயிற்றை வளர்த்தல் ஆகும். சீச்சீ! இப்படி வாழ்வது மானக்கேடு. இந்த மானக்கேட்டோடு வாழ்வதைக் காட்டிலும் தன் உயிரை விட்டுவிடுவது மேலானது. 



செய் தீவினை இருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்
எய்த வருமோ இரு நிதியம்?-வையத்து
அறும் பாவம் என்ன அறிந்து அன்று இடார்க்கு இன்று
வெறும் பானை பொங்குமோ மேல்!

17
செய் தீவினை இருக்கத் தெய்வத்தை நொந்தக்கால் எய்த வருமோ இருநிதியம் வையத்து அறும் பாவம் என்ன அறிந்து அன்று இடார்க்கு இன்று வெறும்பானை பொங்குமோ மேல் வெறும் பானை பொங்குமோ? (உலையில் அரிசி போட்டு அடுப்பு எரித்தால்தானே சோறு பொங்கும்.) அதுபோல, முன்பு கொடுத்து வைத்திருந்தால்தானே இன்று செல்வம் நமக்குத் திரும்ப வந்து சேறும். பாவம் செய்துவிட்டு, முயன்று ஈட்டியும் பணம் சேரவில்லையே என்று தெய்வத்தை நொந்துகொள்வதால் என்ன பயன். 


பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்;-கூடுவிட்டு இங்கு
ஆவிதான் போயின பின்பு யாரே அனுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம்?

22
பணத்துக்காகப் பாடுபட்டுகின்றனர். பணத்தைத் தேடிக்கொள்கின்றனர். தேடிய பணத்தை யாருக்கும் தெரியாமல் புதைத்து வைக்கின்றனர். அனுபவிக்காமல் மறைத்து வைக்கின்றனர். இவர்கள் கேடு கெட்ட மனிதர்கள். இப்படிக் கேடுகெட்ட மனிதரே! ஒன்று சொல்கிறேன் கேளுங்கள். உங்கள் உடம்புக் கூட்டை விட்டுவிட்டு உங்கள் ஆவி போன பின்பு அந்தப் பணத்தை யார்தான் அனுபவிக்கப் போகிறார்கள்? பாவிகளே! சொல்லுங்கள். 

வேதாளம் சேருமே வெள் எருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே - மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரம் சொன்னார் மனை.

23
பொதுமக்கள் கூடியிருக்கும் மன்றத்தில் நடுவு நிலைமையோடு (நடுநிலையோடு) சாட்சியோ (கரி), தீர்ப்போ கூறவேண்டும். அப்படிக் கூறாமல் வாதாடுவோரில் ஒருவர் பக்கம் அவரது நன்மையை மட்டும் கருத்தில் கொண்டோ, செல்வாக்கைக் கருதி அவரிடம் அச்சம் கொண்டோ ஓரவஞ்சனையாக எதுவும் சொல்லக்கூடாது. இப்படி ஓரம் சொன்னால், அவர் வீட்டில், அச்சுறுத்தும் ஆவி வேதாளம் சேரும். வெள்ளை எருக்கு பூக்கும். பாதாள மூலி (பாசி, பாசான்) படரும். செல்வச் செழிப்பைச் சேரவொட்டாமல் தடுக்கும் மூதேவி வலியச் சென்று இருந்துகொண்டு வாழ்வான். பாம்புகள் குடியேறும். இப்படியெல்லாம் வீடு பாழாகப் போய்விடும். 


நீறில்லா நெற்றிபாழ்; நெய்யில்லா உண்டிபாழ்
ஆறில்லா ஊருக்கு அழகுபாழ் - மாறில்
உடன்பிறப் பில்லா உடம்புபாழ்; பாழே
மடக்கொடி இல்லா மனை.

24
திருநீறு இல்லாத நெற்றி பாழ். நெய் இல்லாத உணவு பாழ். பாயும் ஆறு இல்லாத ஊருக்கு அழகு பாழ். கருத்து மாறுபாடு இல்லாத உடன்பாறப்பாளர் இல்லாத உடம்பு பாழ். (துணை வேண்டுமே) மனைவி இல்லாத மனை பாழ். பாழ் = 0, பாழ் = ஒன்றுமில்லாத வெற்றிடம். 
 
ஆன முதலில் அதிகம் செலவானால்
மானம் அழிந்து மதிகெட்டுப் - போனதிசை
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு.

25
தேடி முதலாக வைத்திருக்கும் பொருளை விட அதிகமாக ஒருவன் செலவு செய்தால் என்ன ஆகும். தன்மானம் அழிந்துபோகும். புத்தி கெட்டுச் செயல்படுவான். அவன் எங்குச் சென்றாலும் அங்குள்ள அனைவர்க்கும் திருடனாகத் தென்படுவான். ஏழு பிறப்பிலும் கொடியவனாக மாறிவிடுவான். எண்ணிப்பார். உண்மை விளங்கும்.


மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்
பசி வந்திடப் பறந்து போம்.

26
மானம் = தன்மான உணர்வு, குலம் = குலப்பெருமை பற்றிய சிந்தனை, கல்வி = கற்ற கல்வியின் திறமை, வண்மை = உடல் வளம், அறிவுடைமை = எண்ணிப் பார்க்கும் அறிவு, தானம் = கொடை வழங்கும் வள்ளல் தன்மை, தவம் = தவம் செய்யும் அறநெறி, உயர்ச்சி = உயர்வு பற்றிய எண்ணம், தாளாண்மை = செயலாற்ற முயலுதல், தேனின் கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் = தேனைப் போல் பேசும் பெண்மீது ஆசைப்படுதல் ஆகிய பத்தும் பசி வந்திடப் பறந்து போம். 

உண்பது நாழி உடுப்பது நான்கு முழம்
எண்பது கோடி நினைந்து எண்ணுவன - கண் புதைந்த
மாந்தர் குடி வாழ்க்கை மண்ணின் கலம்போலச்
சாந்துணையும் சஞ்சலமே தான்.

28
உண்பது நாள் ஒன்றுக்கு ஒரு நாழி அளவு தானியத்தால் சமைத்த உணவு. இடையில் அற்றம் மறைக்க ஒருவர் உடுத்திக் கொள்வது நான்குமுழத் துணி. என்னுவன எண்பது கோடி நினைவுகள். கண் புதைந்துபோயிருக்கும் மாந்தர்கள் நாம். நாம் குடும்பம் நடத்துகிறோமே அந்தக் குடிவாழ்க்கையானது, மண்ணால் செய்த பாண்டம் போன்றது. (நம் உடம்பும் மண்ணால் செய்த பாண்டம் போன்றது. எப்போது கீழே விழுந்து உடையுமோ தெரியாது). இந்த உண்கலம் போலச் சாம் துணையும் நம் உடம்புக்கும், வாழ்க்கைக்கும் கவலைகள்தாம். சஞ்சலம் = கவலை, கலம் = பாண்டம், பாத்திரம். 


கல்லானே ஆனாலும் கைப்பொருள்ஒன் றுண்டாயின்
எல்லாரும் சென்றாங் கெதிர்கொள்வர் - இல்லானை
இல்லாளும் வேண்டாள்; மற்றீன்றெடுத்த தாய்வேண்டாள்
செல்லாது அவன்வாயிற் சொல்.

34
கையிலே பொருள் வைத்திருப்பவன் ஆயின், அவன் கல்வி அறிவு இல்லாதவன் ஆனாலும், அவன் வரும்போது அவனிடம் எல்லாரும் சென்று எதிர்கொண்டு வரவேற்பர். கையில் பொருள் இல்லாத ஏழையாக வாழ்ந்தால், அவனை மனைவியும் விரும்பமாட்டாள்; பெற்றெடுத்த தாயும் விரும்பமாட்டாள். அவன் வாயிலிருந்து வரும் சொற்கள் செல்லாக் காசுகள் ஆகிவிடும். 



நாலு கோடிப் பாடல்கள்

ஔவையார் ஒரு சமயம் சில புலவர்களைக் காணச் சென்றபோது அப்புலவர்கள் கவலைதோய்ந்த முகத்தோடு காணப்படவே அதன் காரணத்தை வினவினார்.

"நாளைப் பொழுது விடிவதற்குள் நான்கு கோடிப் பாடல்கள்" இயற்றவேண்டும் என மன்னவன் ஆணையிட்டுள்ளான். அதனால் தான் கவலையடைந்துள்ளோம்" என்று அவர்கள் கூறினராம்.

இதைக்கேட்ட ஔவையார், "இவ்வளவுதானா, இதற்காகவா கவலை கொண்டுள்ளீர்கள்" என்று கூறி கோடி என்ற வார்த்தையை அடக்கிய 4 பாடல்களைக் சொன்னார். இதுவே நாலு கோடிப் பாடல்கள் எனப்படும்

"மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று 
மிதியாமை கோடி பெறும்"

தம்மை மதியாதவர்களின் வீட்டு வாயிலில் அவரையும் ஒரு பொருட்டாகக் கருதிச் சென்று மிதியாதிருத்தல் கோடிபெறும்.
 


"உண்ணீர் உண்ணீரென்று உபசரியார் தம்மனையில் 
உண்ணாமை கோடி பெரும்"

உண்ணீர் உண்ணீர்” என்று உபசரியாதவர்கள் வீட்டில் உண்ணாதிருத்தல் கோடி பெறும். (“என்றூட்டாதார்” என்பதும் பாடம்.)
 


"கோடி கொடுப்பினும் குடிப்பிறந்தார் தம்முடனே 
கூடுதலே கோடி பெறும்"

கோடிப் பொன் கொடுத்தாயினும் நல்ல குடிப்பிறப்பு உடையவர்களோடு. கூடியிருப்பது கோடி பெறும்.
 


"கோடானு கோடி கொடுப்பினுந் தன்னுடைநாக் 
கோடாமை கோடி பெறும்"


எத்தனை கோடி தந்தாலும் தன்னுடைய நாவாவது கோணாதிருக்கும் (உண்மையே பேசும் தன்மை) கோடி பெறும்.
 

No comments: