Sunday, January 28, 2018

சித்தர் பாடல்கள் சில


அழுகணிச் சித்தர் பாடல்

ஊத்தைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி 
மாற்றிப்பிறக்க மருந்தெனக்குக் கிட்டுதில்லை
 
மாற்றிப்பிறக்க மருந்தெனக்குக் கிட்டுமென்றால்
 
ஊத்தைச் சடலம் விட்டே - என் கண்ணம்மா
 
உன் பாதம் சேரேனே?

கொல்லன் உலைபோலக் கொதிக்குதடி என் வயிறு 
நில் என்று சொன்னால் நிலைநிறுத்தக் கூடுதில்லை;
 
நில்லென்று சொல்லி நிலைநிறுத்த வல்லார்க்குக்
 
கொல் என்று வந்த நமன் - என் கண்ணம்மா
 
குடியோடிப் போகாணோ!

மாமன் மகளடியோ மச்சினியோ நானறியேன் 
காமன் கணையெனக்கு கனலாக வேகுதடி
 
மாமன் மகளாகி மச்சினியும் நீயானால்
 
காமன் கணைகளெல்லாம் என் கண்ணம்மா!
 
கண்விழிக்க வேகாவோ

புல்லரிடத்திற்போய் பொருள் தனக்கு கையேந்தி 
பல்லை மிகக்காட்டிப் பரக்க விழிக்கிறண்டி
 
பல்லை மிகக் காட்டாமல் பரக்க விழிக்காமல் - என் கண்ணம்மா
 
புல்லரிடம் போகாமல் என் கண்ணம்மா!
 
பொருளெனக்குத் தாராயோ

பையூரிலேயிருந்து பாழூரிலே பிறந்து 
மெய்யூரில் போவதற்கு வேதாந்த வீடறியேன்
 
மெய்யூரில் போவதற்கு வேதாந்த வீடறிந்தால்
 
பையூரும் மெய்யூரும் என் கண்ணம்மா!
 
பாழாய் முடியாவோ

உன்னை மறந்தல்லோ உளுத்த மரமானேன் 
தன்னை மறந்தார்க்குத் தாய்தந்தை யில்லையடி
 
தன்னை மறக்காமல் தாயாரு முண்டானால்
 
உன்னை மறக்காமல்  என் கண்ணம்மா 
ஒத்திருந்து வாழேனோ.



பட்டினத்தார் பாடல்கள்

கல்லாப் பிழையும், கருதாப் பிழையும், கசிந்துருகி
நில்லாப் பிழையு நினையாப் பிழையும், நின்னஞ்செழுத்தைச்
சொல்லாப் பிழையுந், துதியாப் பிழையுந், தொழாப் பிழையும்
எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சியேகம்பனே.

ஐயிரண்டு திங்களா யங்கமெலாம் நொந்து பெற்றுப் 
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் - செய்யஇரு
 
கைப்புறத்தி லேந்திக் கனகமுலை தந்தாளை
 
எப்பிறப்பிற் காண்பே னினி

அரிசியோ நானிடுவே னாத்தாள் தனக்கு 
வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் - உருசியுள்ள
 
தேனே யமிர்தமே செல்வத் திரவியப்பூ
 
மானே யென வழைத்த வாய்க்கு

“முந்தித் தவங்கிடந்து முந்நூறு நாள் அளவும் 
அந்திபக லாச்சிவனை யாதரித்துத் -

தொந்திசரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ 
வெரியத் தழல்மூட்டு வேன்”


வட்டிலிலுந் தொட்டிலிலும் மார்மேலுந் தோன் மேலுங் 
கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து - முட்டச்
 
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டுந் தாய்க்கோ
 
விறகிலிட்டுத் தீமூட்டு வேன்

அள்ளியிடுவ தரிசியோ தாய்தலைமேல் 
கொள்ளிதனை வைப்பேனோ கூசாமல் - மெள்ள
 
முகமேன் முகம்வைத்து முத்தாடி யென்றன்
 
மகனே யெனவழைத்த வாய்க்கு

முன்னை இட்ட தீ முப்புறத்திலே
பின்னை இட்ட தீ தென் இலங்கையில்
அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே
யானும் இட்ட தீ மூள்க மூள்கவே

வேகுதே தீயதனில் வெந்து பொடி சாம்பல் 
ஆகுதே பாவியே னையகோ – மாகக்
குருவி பறவாமற் கோதாட்டி யென்னைக் 
கருதி வளர்த்தெடுத்த கை
வெந்தாளோ சோணகிரி வித்தகா நின்பதத்தில் 
வந்தாளோ என்னை மறந்தாளோ - சந்ததமு 
முன்னையே நோக்கி யுகந்துவரங் கிடந்துஎன்
 
றன்னையே யீன்றெடுத்த தாய்
வீற்றிருந்தா ளன்னை வீதிதனி லிருந்தாள் 
நேற்றிருந்தா ளின்று வெந்து நீறானாள் - பாற்றெளிக்க
 
வெல்லீரும் வாருங்க ளேதென் றிரங்காம
 
லெல்லாந் சிவமயமே யாம்

மனையாளு மக்களும் வாழ்வுந் தனமுந்தன் வாயின்மட்டே 
யினமான சுற்ற மயானம் மட்டே வழிக்கேது துணை
 
தினையாமள வெள் ளளவாகினு முன்பு செய்ததவந்
 
தனையாள வென்றும் பரலோகஞ் சித்திக்குஞ் சத்தியமே

ஒருமடமாதும் ஒருவனும்ஆகி இன்பசுகம் தரும் 
அன்பு பொருந்தி உணர்வுகலங்கி ஒழுகிய விந்து ஊறுசுரோணிதம்
 
மீதுகலந்து
 
பனியில் ஓர்பாதி சிறிதுளிமாது பண்டியல் வந்து


நாபிளக்க பொய்யுரைத்து நவநிதியம் தேடி 
நலனொன்றும் அறியாத நாரியரைக் கூடி 
பூப்பிளக்க வருகின்ற புற்றீசல் போல
 
புலபுலென கலகலெனப் புதல்வர்களை பெறுவீர் 
காப்பதற்கும் வகையறியீர் கைவிடவு மாட்டீர் 
கவர்பிளந்த மரத்துளையிற் கால்நுழைத்துக் கொண்டே 
ஆப்பதனை அசைத்துவிட்ட குரங்கதனை போல 
அகப்பட்டீரே கிடந்துழல அகப்பட்டீரே

காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே
சிவவாக்கியர் பாடல்
நட்டகல்லைத் தெய்வமென்று நாலுபுஷ்பந் சாத்தியே 
சுற்றிவந்து முணமுணென்று சொல்லு மந்திரம் ஏதடா
 
நட்டகல்லும் பேசுமோ நாதனுள் ளிருக்கையில்
 
சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ

ஓசையுள்ள கல்லைநீ உடைத்திரண்டாய் செய்துமே 
வாசலிற் பதித்தகல்லை மழுங்கவே மிதிக்கின்றீர்
 
பூசனைக்கு வைத்த கல்லில் பூவும் நீரும் சாத்து கிறீர்
 
ஈசனுக்குகந்த கல்லெந்தக் கல்லு சொல்லுமே

பண்ணிவைத்த கல்லையும் பழம் பொருளது என்றுநீர் 
எண்ணம் உற்றும் என்னபேர் உரைக்கின்றீர்கள் ஏழைகாள்
பண்ணவும் படைக்கவும் படைத்துவைத்து அளிக்கவும்
ஒண்ணும் ஆகி உலகு அளித்த ஒன்றை நெஞ்சில் உன்னுமே

பூசைபூசை யென்றுநீர் பூசைசெய்யும் பேதைகாள் 
பூசையுன்ன தன்னிலே பூசைகொண்ட தெவ்விடம் 
ஆதிபூசை கொண்டதோ வனாதிபூசை கொண்டதோ 
ஏதுபூசை கொண்டதோ வின்னதென் றியம்புமே

வாயிலே குடித்தநீரை எச்சிலென்று சொல்லுறீர் 
வாயிலே குதப்புவேத மெனப்படக் கடவதோ
 
வாயிலெச்சில் போக வென்று நீர்தனைக் குடிப்பீர்காள்
 
வாயிலெடச்சில் போனவண்ணம் வந்திருந்து சொல்லுமே

ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த சோதியை 
நாடி நாடி நாடிநாடி நாட்களும் கழிந்துபோய்
 
வாடி வாடி வாடிவாடி மாண்டுபோன மாந்தர்கள்
 
கோடிகோடி கோடிகோடி எண்ணிறந்த கோடியே.

சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாத பட்டரே 
வேர்த்துஇரைப்பு வந்தபோது வேதம்வந்து உதவுமோ
 
மாத்திரைப் போதும்முளே மறிந்து நோக்கவல்லிரேல்
 
சாத்திரப்பை நோய்கள்ஏது சத்திமுத்தி சித்தியே.

நாலுவேதம் ஒதுவீர் ஞானபாத அறிகிலீர் 
பாலுள்நெய்கலந்தவாறு பாவிகாள் அறிகிலீர்
 
ஆலம்உண்ட கண்டனார் அகத்துளே இருக்கவே
 
காலன்என்று சொல்லுவீர் கனாவிலும் அதில்லையே

சாமம்நாலு வேதமும் சகலசாத் திரங்களும் 
சேமமாக வோதினும் சிவனைநீர் அறிகிலீர்
 
காமநோயை விட்டுநீர் கருத்துளே உணர்ந்தபின்
 
ஊமையான காயமாய் இருப்பன் எங் கள்ஈசனே.

கோயிலாவது ஏதடா குளங்களாவது ஏதடா
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே
கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே
ஆவதும் அழிவதும் இல்லைஇல்லை இல்லையே.



பறைச்சியாவது ஏதடா பணத்தியாவது ஏதடா
இறைச்சிதோல் எலும்பினும் இலக்கம்இட் டிருக்குதோ
பறைச்சி போகம் வேறதோ பணத்திபோகம் வேறதோ
பறைச்சியும் பணத்தியும் பகுத்துபாரும் உம்முளே.

கறந்தபால் முலைப்புகா கடைந்தவெண்ணை மோர்புகா 
உடைந்துபோன சங்கினோசை உயிர்களும் உடற்புகா
 
விரிந்த பூஉதிர்ந்த காயும் மீண்டும் போய் மரம்புகா
 
இறந்தவர் பிறப்பதில்லை இல்லையில்லை இல்லையே
.
சொற்குருக்க ளானதும் சோதிமேனி யானதும்
மெய்க்குருக்க ளானதும் வேணபூசை செய்வதும்
சத்குருக்க ளானதும் சாத்திரங்கள் சொல்வதும்
மெய்க்குருக்க ளானுதும் திரண்டுருண்ட தூமையே.

உடம்புயிர் எடுத்ததோ உயிருடம்பு எடுத்ததோ 
உடம்புயிர் எடுத்தபோது உருவமேது செப்புவீர்
 
உடம்புயிர் எடுத்தபோதஉயிஇறப்ப தில்லையே
 
உடம்புமெய் மறந்துகண்டு உணர்ந்துஞானம் ஓதுமே
.
இல்லை இல்லை இல்லையென்று இயம்புகின்ற ஏழைகாள் 
இல்லையென்று நின்றதொன்றை இல்லையென்ன லாகுமோ
 
இல்லையல்ல வொன்றுமல்ல இரண்டும் ஒன்றிநின்றதை
 
எல்லைகண்டு கொண்டபேர் இனிப்பிறப்பது இல்லையே

மாதமாதம் தூமைதான் மறந்துபோன தூமைதான் 
மாதமற்று நின்றலோ வளர்ந்துரூப மானது
 
நாதமேது வேதமேது நற்குலங்கள் ஏதடா
 
வேதமோதும் வேதியர் விளைந்தவாறும் பேசடா.

வேணும்வேணும் என்றுநீர் வீண்உழன்று தேடுவீர் 
வேணுமென்று தேடினாலும் உள்ளதல்ல தில்லையே
வேணும்என்று தேடுகின்ற வேட்கையைத் திறந்தபின் 
வேணும்என்ற அப்பொருள் விரைந்துகாண லாகுமே.

புலால்புலால் புலாலதென்று பேதமைகள் பேசுறீர் 
புலாலைவிட்டு எம்பிரான் பிரிந்திருந்தது எங்ஙனே
 
புலாலுமாய் பிதற்றுமாய் பேருலாவுந் தானுமாய்
 
புலாலிலே முளைத்தெழுந்த பித்தன்காணும் அத்தனே.



மீனிறைச்சி தின்றதில்லை அன்றுமின்றும் வேதியர் 
மீனிருக்கும் நீரலோ மூழ்வதுங் குடிப்பதும்
 
மானிறைச்சி தின்றதில்லை அன்றுமின்றும் வேதியர்
 
மானுரித்த தோலலோ மார்புநூல் அணிவதும்.
159


ஆட்டிறைச்சி தின்றதில்லை அன்றுமின்றும் வேதியர் 
ஆட்டிறைச்சி அல்லவோ யாகம்நீங்கள் ஆற்றலே
 
மாட்டிறைச்சி தின்றதில்லை அன்றுமின்றும் வேதியர்
 
மாட்டிறைச்சி அல்லவோ மரக்கறிக் கிடுவது.

பிறந்தபோது கோவணம் இலங்குநூல் குடுமியும் 
பிறந்ததுடன் பிறந்ததோ பிறங்கு நாள் சடங்கெலாம்
 
மறந்தநாலு வேதமும் மனத்துளே உதித்ததோ
 
நிலம்பிறந்து வானிடிந்து நின்ற தென்ன வல்லிரே.

ஐயிரண்டு திங்களாய் அடங்கிநின்ற தூமைதான் 
கையிரண்டு காலிரண்டு கண்ணிரண்டும் ஆகியே
 
மெய்திரண்டு சத்தமாய் விளங்கிரச கந்தமும்
 
துய்யகாயம் ஆனதும் சொல்லுகின்ற தூமையே

உயிரிருந்தது எவ்விடம் உடம்பெடுத்த தின்முனம் 
உயிரதாவது ஏதடா உடம்பதாவது ஏதடா
 
உயிரையும் உடம்பையு ம்ஒன்றுவிப்பது ஏதடா
 
உயிரினால் உடம் பெடுத்த உண்மைஞானி சொல்லடா.

ஆடுநாடு தேடினும் ஆனைசேனை தேடினும் 
கோடிவாசி தேடினும் குறுக்கேவந்து நிற்குமோ
 
ஓடியிட்ட பிச்சையும் உகந்து செய்த தர்மமும்
 
சாடிவிட்ட குதிரைபோல் தர்மம் வந்து நிற்குமே.

பேய்கள்பேய்க ளென்கிறீர் பிதற்றுகின்ற பேயர்காள் 
பேய்கள்பூசை கொள்ளுமோ பிடாரிபூசை கொள்ளுமோ
 
ஆதிபூசை கொள்ளுமோ அனாதிபூசை கொள்ளுமோ
 
காயமான பேயலோ கணக்கறிந்து கொண்டதே.

கயத்துநீர் இறைக்கிறீர் கைகள் சோர்ந்து நிற்பதேன் 
மனத்துள்ஈரம் ஒன்றிலாத மதியிலாத மாந்தர்காள்
 
அகத்துள்ஈரங் கொண்டுநீர் அழுக்கறுக்க வல்லிரேல்
 
நினைத்திருந்த வோதியும் நீயும்நானும் ஒன்றலோ.



பத்திரகிரியார் பாடல்

“ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைக் சுட்டறுத்துத்
தூங்காமல் தூங்கிச் சுகம் பெற வேண்டும்
நீங்காச் சிவயோக நித்திரை கொண்டே இருந்து
தேங்காக் கருணை வெள்ளம் தேக்க வேண்டும்
அருவாய் உருவாகி, ஆதி அந்தம் ஆகின்ற
குருவாக வந்து எனை ஆட்கொண்டு அருள வேண்டும்


1 comment:

சந்திர மௌலி said...

வாழ்க நீவீர் பல்லாண்டு