Wednesday, April 3, 2019

‘வயிறு’ பற்றி ஒளவையும் ரமணரும் கூறியது

ஒருநாள் இரவு ஆசிரமத்தில் சுவையான சாப்பாடு சாப்பிட்டு விட்டு பக்தர்கள் சிலருடன் ரமண மகரிஷி அமர்ந்திருந்தார். வழக்கத்தை விட தாமதமாக இரவு உணவை உண்டதால் எல்லோரும் களைப்படைந்தனர்.
அப்போது அவர்களுடன் இருந்த சோமசுந்தர சுவாமி என்பவர் நீண்ட அறையில் படுத்துக் கொண்டு தன் வயிற்றைத் தடவியபடி பாடல் ஒன்றைப் பாடினார்.
''ஒருநாள் உணவை
ஒழியென்றால் ஒழியாய்
இரு நாளைக்கு
ஏலென்றால் ஏலாய்
ஒரு நாளும்
என்னோ அறியாய்
இடும்பை கூர்
என் வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது''
இந்தப் பாடல், ஒரு காலத்தில் வயிற்றை நோக்கி ஒளவையார் என்னும் பெண் புலவரால் பாடப்பட்டதாகும்.
இதன் பொருள்:
''ஏ, வயிறே! ஒரு நாள் உணவை உண்ணாமல் இரு என்றால் நீ கேட்பதில்லை. அல்லது இரண்டு நாளைக்குச் சேர்த்துச் சாப்பிடு என்றாலும் அவ்வாறு செய்வதில்லை. நீ மிகவும் துன்பம் தருகிறாய். உன்னோடு வாழ்வது என்பது அரிது.''
இந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டிருந்த ரமண மகரிஷி, வயிறு மனிதனை நோக்கிப் பாடுவதுபோல, அதே பாடலை மாற்றிப் பாடினார்.
''ஒரு நாழிகை வயிறு எற்கு
ஓய்வு ஈயாய் நாளும்
ஒரு நாழிகை
உண்பது ஓயாய்
ஒரு நாளும்
என்னோ அறியாய்
இடும்பை கூர்
என் உயிரே
உன்னோடு வாழ்தல் அரிது''
பாடலின் பொருள் இதுதான்:
''ஓ, உயிருக்கு உறைவிடமான மனிதனே! வயிறாகிய எனக்கு நீ ஒரு நாழிகை கூட ஓய்வு அளிப்பதில்லை. ஒரு நாழிகைகூட நீ சாப்பிடுவதை நிறுத்துவதில்லை. என் துன்பம் உனக்குப் புரிவ தில்லை. எனக்குத் தொல்லை தரும் என்னுயிரே! உன்னோடு வாழ்தல் அரிது.''
இந்தப் பாடல் எழுந்த சூழ்நிலை பற்றிக் கூறும்போது, ''விளையாட்டுக்காக எழுதிப் பாடினேன்'' என்றார் மகரிஷி. சிந்தித்துப் பார்த்தால் இது விளையாட்டாகப் பாடிய பாடலாகவா தோன்றுகிறது?
ரமணரது இந்த பாடல், வயிற்றை நோக்கிப் பாடிய ஒளவையாருக்கு, வயிறே பதில் சொல்வது போல் அல்லவா தெரிகிறது!

1 comment:

avanevan said...

Excellent anecdote & Shri Ramana's rejoinder composition to Avaiyaar. Thanks. Good luck.