எட்டயபுரம் சமஸ்தானத்தில் காந்திமதிநாதன் என்பவர் தமிழ்ப் புலவர். பாரதியை விட வயதில் மூத்தவர். மன்னர் அவையில் பாரதியின் புலமையைச் சோதித்துக் கொண்டு அவரை ஈற்றடி கொடுத்து வெண்பா பாடச் சொன்னார்கள். காந்திமதிநாதன் "பாரதி சின்னப் பயல் ," எனும் ஈற்றடி கொடுத்துப் பாடச் சொன்னார். அதில் பாரதியை ஏளனம் செய்யும் நோக்கமும் இருந்திருக்கிறது. பாரதி உடனே பாடினார்.
"ஆண்டில் இளையவன் என்றந்தோ அகந்தையினால்
ஈண்டிங்கு இகழ்ந்தென்னை ஏளனம்செய் மாண்பற்ற
காரிருள்போல் உள்ளத்தான் காந்திமதி நாதனைப்
பாரதி (பார் அதி) சின்னப் பயல்"
"காந்திமதிநாதனைப் பார் அதி சின்னப் பயல்" எனும் பொருள்படும்படி அமைந்தது இந்தப் பாடல். இதைக் கேட்டு சபையோர் பரிகசிக்க குறுகிப்போனார் காந்திமதி நாதன். உடனே வயதில் மூத்தவரை அப்படி ஏளனம் செய்தது தவறு என்றுணர்ந்து பாரதி, மறுபடி பாடலை மாற்றிப் பாடினார். எப்படி?
"ஆண்டில் இளையவன் என்றுஐய அருமையினால்
ஈண்டின்று என்றன்தன்னை நீயேந்தினையால் மாண்புற்ற
காரதுபோல் உள்ளத்தான் காந்திமதி நாதற்கு
பாரதி சின்னப் பயல்"
வயதில் இளையோன் என்று அன்போடு என்னை நேசிக்கும் மண்புமிகு காந்திமதி நாதனின் முன் பாரதி சின்னப் பயல் என்று பொருள் வரும்படி பாடலை மாற்றியமைத்தார். சபையிலிருந்தோர் பாரதியின் பண்பினைப் போற்றினர். இந்த நிகழ்வு நடைபெறும் போது பாரதிக்கு வயது 14. இதுவே அவரின் இளமையில் புலமைக்கு ஓர் சான்று.
No comments:
Post a Comment