Monday, January 28, 2019

பாரதி சின்னப் பயல்

 

எட்டயபுரம் சமஸ்தானத்தில் காந்திமதிநாதன் என்பவர் தமிழ்ப் புலவர். பாரதியை விட வயதில் மூத்தவர். மன்னர் அவையில் பாரதியின் புலமையைச் சோதித்துக் கொண்டு அவரை ஈற்றடி கொடுத்து வெண்பா பாடச் சொன்னார்கள். காந்திமதிநாதன் "பாரதி சின்னப் பயல் ," எனும் ஈற்றடி கொடுத்துப் பாடச் சொன்னார். அதில் பாரதியை ஏளனம் செய்யும் நோக்கமும் இருந்திருக்கிறது. பாரதி உடனே பாடினார்.

"ஆண்டில் இளையவன் என்ற‌ந்தோ அகந்தையினால்
ஈண்டிங்கு இகழ்ந்தென்னை ஏளனம்செய் ‍ மாண்பற்ற‌
காரிருள்போல் உள்ளத்தான் காந்திமதி நாதனைப்
பாரதி (பார் அதி) சின்னப் பயல்"

"காந்திமதிநாதனைப் பார் அதி சின்னப் பயல்" எனும் பொருள்படும்படி அமைந்தது இந்தப் பாடல். இதைக் கேட்டு சபையோர் பரிகசிக்க குறுகிப்போனார் காந்திமதி நாதன். உடனே வயதில் மூத்தவரை அப்படி ஏளனம் செய்தது தவறு என்றுணர்ந்து பாரதி, மறுபடி பாடலை மாற்றிப் பாடினார். எப்படி?

"ஆண்டில் இளையவன் என்றுஐய அருமையினால்
ஈண்டின்று என்றன்தன்னை நீயேந்தினையால் மாண்புற்ற‌
காரதுபோல் உள்ளத்தான் காந்திமதி நாதற்கு
பாரதி சின்னப் பயல்"

வயதில் இளையோன் என்று அன்போடு என்னை நேசிக்கும் மண்புமிகு காந்திமதி நாதனின் முன் பாரதி சின்னப் பயல் என்று பொருள் வரும்படி பாடலை மாற்றியமைத்தார். சபையிலிருந்தோர் பாரதியின் பண்பினைப் போற்றினர். இந்த நிகழ்வு நடைபெறும் போது பாரதிக்கு வயது 14. இதுவே அவரின் இளமையில் புலமைக்கு ஓர் சான்று.

Sunday, January 13, 2019

தமிழ் மொழியின் இன்றைய நிலை

'மெல்லத் தமிழ் இனி சாகும்' என்ற வார்த்தை மெய்யாகி விடுமோ என்ற பயம் எனக்குள்ளே மெல்ல மெல்ல எழுகிறது, ஏனென்றால் இன்றைய சூழ்நிலையில் தமிழகத்தில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவ- மாணவியரில் 50 சதவிகிதத்தினருக்கு, இரண்டாம் வகுப்புத் தமிழ்ப் பாடத்தைப்  புரிந்துகொள்ளக்கூடிய திறன் இல்லை. எட்டாம் வகுப்பு மாணவ- மாணவியரில் 30 சதவிகிதத்தினருக்கும் இதே பிரச்னைதான். ஆங்கிலத்தை மின்னல் வேகத்தில் வாசிக்கும் இந்த மாணவ- மாணவியர்களால், தமிழைத் திக்கித் திணறித்தான் வாசிக்க முடிகிறது. இந்த விஷயத்தில் அரசுப் பள்ளி, தனியார்ப் பள்ளி என்கிற வேறுபாடு இல்லை. மேல்நிலைப் பள்ளி மாணவ - மாணவியரில் தனியார்ப் பள்ளிகளைவிட அரசுப் பள்ளி மாணவர்கள் சற்று பரவாயில்லை. அரசுப் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி முறை  இருப்பதால், தனியார்ப் பள்ளி மாணவர்களைவிட அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தமிழ் வாசிப்புத் திறன் சற்று அதிகம்.

தமிழ் மொழியை வாசிக்கவே மாணவ - மாணவியர் தடுமாறும் விஷயம் மிகவும் ஆபத்தானது. மொழியை வாசிக்கத் தெரிந்தால் மட்டுமே அதிலுள்ள கருத்தை ஆழமாகப் புரிந்துகொள்ள முடியும். இப்போது தமிழில் படிக்கத் தடுமாறுபவர்கள், பிற்காலத்தில் கஷ்டப்பட நேரிடும். அதனால், இந்த விஷயத்தில் பள்ளிகள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். ஆங்கிலத்தை வாசிக்கும்போது உற்சாகப்படுத்துவது போன்று, தமிழை வாசிக்கும்போதும் குழந்தைகளை  உற்சாகப்படுத்த வேண்டும்.

இந்நிலை மாற நாம் என்ன செய்ய வேண்டும் ?

குழந்தைகள் படிக்க விருப்பமுள்ள கதைப் புத்தகங்களை வாங்கிக் கொடுக்க வேண்டும். சித்திரக்கதைப் (காமிக்ஸ்) புத்தகங்கள்கூட மாணவர்களின்  வாசிப்புத்திறனை மேம்படுத்தும். பாடப்புத்தகத்தை எடுக்க மறுக்கும் மாணவர்கள்,  சித்திரக்கதைப் புத்தகங்களை வாசிக்கும் திறன்மூலம் தங்களை அறியாமலேயே தாய்மொழியைப் பயில பயிற்சி பெறுகின்றனர். தமிழ் மொழியில் வெளிவந்த சித்திரக்கதைப் புத்தகங்கள் அழிந்துபோயின. இதுகூட மொழி அழிவுக்கான ஓர் அடையாளம்தான். இப்போது ஆங்கில காமிக்ஸ் புத்தகங்களையே குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கின்றனர். தமிழ் மொழி சித்திரக்கதைப் புத்தகங்களே மொழியைப் படிக்கவும் காக்கவும் துணை நிற்பவை; குழந்தைகள் வாசிப்புத் திறனை அதிகரிக்கும் சக்தி படைத்தவை.

தாய் மொழியில் வாசிக்கும் திறனைக் குழந்தைகளிடம் இளம் பருவத்திலேயே விதைத்துவிட வேண்டும். இதை நமது வீட்டிலிருந்தே தொடங்கினால்தான் நம் மொழியைக் காக்க முடியும். இப்போது தமிழ் படிக்கத் தடுமாறும் குழந்தைகள் 10 வருடங்களுக்கு முன் ஆங்கில மோகம் பிடித்த பெற்றோர்களால் உற்சாகப்படுத்தப்பட்டவர்கள். தமிழ் மொழியை அலட்சியப்படுத்தியதற்கு விலையாக, தாய்மொழியை வாசிக்கத் திணறும் மாணவச் சமுதாயம் உருவாகியிருக்கிறது. நம்மையறியாமலேயே தாய்மொழியின் அழிவுக்கும் நாம் துணை நிற்கிறோம். அதேவேளையில் இந்தியை எதிர்த்து வெளியே குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறோம். இப்படியே சென்றால், வருங்காலத்தில் தமிழ்மொழியே அழிந்துவிடும் நிலை உருவாகிவிடும். ஆகையால், தமிழ் மொழியை வாசிக்கத் தடுமாறும் குழந்தைகள் மீது இனி தனிக்கவனம் செலுத்தி, வாசிப்புத்திறனை மேம்படுத்தினால், நம் மொழி நம் கையில்.

வாழிய செந்தமிழ் ! வாழ்க  நற்றமிழர் !! வாழிய பாரத மணித்திரு நாடு !!!

- நன்றி விகடன்