Wednesday, April 3, 2019

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்

திருப்புகழ் 6 முத்தைத்தரு  (திருவருணை)

முத்தைத்தரு பத்தித் திருநகை
     அத்திக்கிறை சத்திச் சரவண
          முத்திக்கொரு வித்துக் குருபர ...... எனவோதும்

முக்கட்பர மற்குச் சுருதியின்
     முற்பட்டது கற்பித் திருவரும்
          முப்பத்துமு வர்க்கத் தமரரும் ...... அடிபேணப்

பத்துத்தலை தத்தக் கணைதொடு
     ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
          பட்டப்பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப்

பத்தற்கிர தத்தைக் கடவிய
     பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
          பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ...... ஒருநாளே

தித்தித்தெய ஒத்தப் பரிபுர
     நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
          திக்கொட்கந டிக்கக் கழுகொடு ...... கழுதாடத்

திக்குப்பரி அட்டப் பயிரவர்
     தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
          சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ...... எனவோதக்

கொத்துப்பறை கொட்டக் களமிசை
     குக்குக்குகு குக்குக் குகுகுகு
          குத்திப்புதை புக்குப் பிடியென ...... முதுகூகை

கொட்புற்றெழ நட்பற் றவுணரை
     வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
          குத்துப்பட ஒத்துப் பொரவல ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

முத்தைத்தரு பத்தித் திருநகை ... வெண்முத்தை நிகர்த்த, அழகான
பல்வரிசையும் இளநகையும் அமைந்த

அத்திக்கு இறை ... தேவயானை* தேவியின் தலைவனே,

சத்திச் சரவண ... சக்திவேல் ஆயுதத்தை ஏந்தும் சரவணபவக் கடவுளே,

முத்திக்கொரு வித்துக் குருபர ... மோக்ஷ வீட்டுக்கு ஒப்பற்ற ஒரு
விதையாக விளங்கும் ஞான குருவே,

எனவோதும் முக்கட்பரமற்கு ... என்று துதிக்கும் முக்கண்ணர்
பரமசிவனார்க்கு

சுருதியின் முற்பட்டது கற்பித்து ... வேதங்களுக்கு முதன்மையான
ஓம் என்னும் மந்திரத்தை உபதேசித்து,

இருவரும் ... (மும்மூர்த்திகளில் எஞ்சியுள்ள) பிரம்மா, திருமால் ஆகிய
இருவரும்,

முப்பத்துமுவர்க்கத்து அமரரும் அடிபேண ... முப்பத்து முக்கோடி
தேவர்களும் அடி பணிய நின்றவனே,

பத்துத்தலை தத்தக் கணைதொடு ... ராவணனுடைய பத்துத்
தலைகளும் சிதறி விழுமாறு அம்பை விட்டு,

ஒற்றைக்கிரி மத்தைப் பொருது ... ஒப்பற்ற மந்தர மலையான மத்தைக்
கொண்டு பாற்கடலைக் கடைந்து,

ஒரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாக ... ஒரு பகற்
பொழுதை வட்டமான சக்ராயுதத்தால் இரவு ஆக்கி,

பத்தற்கு இரதத்தைக் கடவிய ... நண்பனாகிய அர்ச்சுனனுக்கு,
தேர்ப்பாகனாக வந்து தேரினைச் செலுத்திய

பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள் ... பசுமையான
நீலமேகவண்ணன் திருமால் பாராட்டும் பரம்பொருளே,

பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே ... பரிவோடு
என்னைக் காத்தருளும் நாள் ஒன்றும் உண்டோ?

(இப்பாடலின் பிற்பகுதி முருகன் அசுரர்களுடன் செய்த போரினை
விரிவாக வருணிக்கிறது).

தித்தித்தெய ஒத்தப் பரிபுர ... தித்தித்தெய என்ற தாளத்துக்கு ஒத்து,
சிலம்புகள் அணிந்த

நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி ... நாட்டியப் பாதங்களை வைத்து
காளிதேவி

திக்கொட்க நடிக்க ... திசைகளில் எல்லாம் சுழன்று தாண்டவம்
செய்யவும்,

கழுகொடு கழுதாட ... கழுகுகளோடு பேய்கள் சேர்ந்து ஆடவும்,

திக்குப்பரி அட்டப் பயிரவர் ... எட்டுத் திக்குகளிலும் உலகங்களைத்
தாங்குகின்ற அஷ்ட பைரவர்கள்**

சித்ரப்பவுரிக்கு ... இந்த அழகிய கூத்துக்கு ஏற்ப

தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு த்ரிகடக
எனவோத
 ... 'தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு த்ரிகடக'
என்ற தாள ஓசையைக் கூறவும்,

கொத்துப்பறை கொட்ட ... கூட்டமாகப் பற்பல பறை
வாத்தியங்களை அதே தாளத்தில் முழக்கவும்,

களமிசை முதுகூகை ... போர்க்களத்தில் கிழக் கோட்டான்கள்

குக்குக்குகு குக்குக் குகுகுகு குத்திப்புதை புக்குப் பிடியென
கொட்புற்றெழ
 ... 'குக்குக்குகு குக்குக் குகுகுகு' என்ற ஓசையோடு
'குத்திப் புதை, புகுந்து பிடி' என்றெல்லாம் குழறி வட்டமாகச்
சுழன்று மேலே எழவும்,

நட்பற்ற அவுணரை ... சினேக எண்ணம் தவிர்த்து விரோத
மனப்பான்மையே கொண்ட அசுரர்களை

வெட்டிப்பலியிட்டுக் குலகிரிகுத்துப்பட ... கொன்று பலி
கொடுத்து, அசுரர் குல மலை கிரெளஞ்சகிரி தூளாக,

ஒத்துப் பொரவல பெருமாளே. ... தர்ம மார்க்கத்துக்குப் பொருந்த,
போர் செய்யவல்ல பெருமாளே.

Tuesday, April 2, 2019

சந்தம் தமிழுக்குச் சொந்தம்


திரிகூடராசப்பக்கவிராயர் எழுதிய திருக்குற்றாலக்குறவஞ்சி நூலிலே வசந்தவல்லி என்ற பெண் பந்துவிளையாடும் காட்சியை விளக்குவதாக அமைந்துள்ள பாடல்கள் நம்மை மிகவும் பரவசப்படுத்துகின்றன. பண்டைக்காலத்திலே பந்தடித்து விளையாடுவதும் பெண்களின் விளையாட்டுக்களிலே ஒன்றாக இருந்திருக்கின்றது என்பதற்கு இந்தப்பாடல்கள் சான்றாக உள்ளன. பந்தை எறிவதும், அதைப்பிடிப்பதும், பந்து பறப்பதும், நிலத்தில் விழுவதுமான காட்சிகளைப் படம்பிடித்துக்காட்டுவதுபோல இந்தப்பாடல்களைப் பொருத்தமான சந்தத்தில் புலவர் எழுதியுள்ளார்.

செங்கையில் வண்டு கலின்கலின் என்று ஜெயம் ஜெயம் என்றாட - இடை 
சங்கதம் என்று சிலம்பு புலம்பொடு தண்டை கலந்தாட - இரு
கொங்கை கொடும்பகை வென்றனம் என்று குழைந்து குழைந்தாட - மணிப் 
பைங்கொடி மங்கை வசந்த சவுந்தரி பந்து பயின்றனளே.

பொங்கு கனங்குழை மண்டிய கெண்டை புரண்டு புரண்டாட - குழல்
மங்கு வில்வண்டு கலைந்தது கண்டு மதன்சிலை வண்டோட - இனி
இங்கிது கண்டுல கென்படும் என்படும் என்றிடை திண்டாட
மங்கல மங்கை வசந்த சவுந்தரி பந்து பயின்றனளே.

சூடக முன்கையில் வால்வளை கண்டிரு தோள்வளை நின்றாடப் - புனை
பாடக முஞ்சிறு பாதமும் அங்கொரு பாவனை கொண்டாடநய
நாடக மாடிய தோகை மயிலென நன்னகர் வீதியிலேஅணி
ஆடக வல்லி வசந்த ஒய்யாரி அடர்ந்துபந் தாடினளே."

இந்தப் பாடல் வரிசையிலே, அடுத்ததாகத் தொடர்ந்து வருவது திரைப்படம் ஒன்றிலே இடம்பெற்றதால் மிகவும் பிரபல்யமாகிவிட்ட பாடலாகும். 'காதலன்' என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற அந்தப் பாடலை எழுதியவர் இக்காலத் திரைப்படப் பாடலாசிரியர்களில் ஒருவர்தான் என்று இன்னும் பலர் எண்ணிக்கொண்டிருக்கின்றார்கள். ஆனால், திரிகூடராசப்பக் கவிராயர் என்ற புலவரால் இயற்றப்பட்ட குற்றாலக் குறவஞ்சியிலே இடம்பெற்ற அந்தப்பாடலைத் திரைப்படத்திற்காக எடுத்தாண்டு இசையமைத்துப் பயன்படுத்தியுள்ளார்கள் என்பதுதான் உண்மை.

அந்தப்பாடல்

"இந்திரை யோவிவள் சுந்தரி யோதெய்வ ரம்பையோ மோகினியோ - மனம்
முந்திய தோவிழி முந்திய தோகரம் முந்திய தோவெனவே - உயர்
சந்திர சூடர் குறும்பல வீசுரர் சங்கணி வீதியிலே - மணிப் 
பைந்தொடி நாரி வசந்த ஒய்யாரிபொற் பந்து கொண்டாடினளே."

Wednesday, February 20, 2019

ஏன் பாசிச கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க க் கூடாது ?


1. கெயில், மீத்தேன், ஹைடிரோகார்பன், நியூட்ரினோ, ஸ்டெர்லைட், சேலம் 8 வழிச்சாலை என மக்கள்நல விரோத திட்டங்கள் .
2. பண மதிப்பிழப்பு தோல்வி, ஜி.எஸ்.டி குளறுபடி, நடுத்தர, சிறு குறு தொழில்கள் நசுக்கப்பட்டு தொழில் முடக்கம்
3. அந்நிய முதலீட்டாளர்களுக்கும், அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட்டுகளுக்கு மட்டும் சிவப்புக்கம்பள வரவேற்பு. 
3. ஒட்டு மொத்த அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் ஓட்டுக்கள் கிடைக்காது.
4. முஸ்லீம், கிறிஸ்தவர் மற்றும் தலித் வெறுப்பு அரசியல்.
5. பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு.
6. சுவிஸ் வங்கியிலிருந்து இன்னும் கறுப்புப்பணம் மீட்கப்படாதது மற்றும் அவர்களது பெயர்கள் இன்னும் வெளியிடப்படாதது.
7. விஜய் மல்லையா, நீரவ் மோடி என வங்கிக்கடனை அடைக்காமல் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்றது.
8. உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம், சிபிஐ போன்றவர்களின் தனிஅதிகாரத்தில் தலையிட்டு நேர்மையாகவும் சுதந்திரமாகவும் செயல்படவிடாமல் தடுப்பது.
9. மாநில அரசுகளின் அதிகாரத்தில் தலையிட்டு கவர்னர்கள் மூலம் குழப்பம் விளைவிப்பது.
10. கட்சியினரின் திமிர் பிடித்த எதேச்சதிகாரமான பேச்சுக்கள்.
11. தேசப்பற்று என்ற பெயரில் மக்களிடையே பிரிவினயைத் தூண்டுவது, சாதி மத  வெறுப்புணர்வை வளர்ப்பது.
 12. தேசத்தந்தையைக் கொன்ற தேசவிரோத சக்திகளான கோட்ஸே, சாவர்க்கர், கோல்வால்கர் போன்ற இந்துத்துவவாதிகளை சிலை வைத்து வழிபடுவது.
13. உளவுத்துறை எச்சரித்தும் பாதுகாப்பில் கோட்டைவிட்டு 350 கிலோ வெடிபொருட்களுடன் தீவிரவாதிகள் ராணுவ வாகனம் மீது மோதி 45 ராணுவ வீரர்களை இறப்புக்கு காரணமாக இருந்தது.
14. தேசமக்கள் வறுமைவில் வாட விளம்பரத்திற்கு மட்டும் 3 ஆயிரம் கோடி செலவு.
15. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்காமல் நடுத்தெருவில் அம்மணமாக போராட விட்டது.

இப்படி இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

Thursday, February 7, 2019

தமிழின் பெருமை

தமிழில் ஒரு பொருளுக்கு இத்தனை சொற்கள் இருக்கின்றதென்பதை இப்பாடல் விளக்கும் திறன் வியக்கச் செய்கிறது. எழுதியவர் கவி வீர ராகவ முதலியார்
“இம்பர் வான் எல்லை இராமனையே பாடி
என் கொணர்ந்தாய் பாணா நீ என்றாள் பாணி
வம்பதாம் களபமென்றேன்
பூசுமென்றாள்
மாதங்கமென்றேன்
யாம் வாழ்ந்தோமென்றாள்
பம்பு சீர் வேழமென்றேன்
தின்னுமென்றாள்
கம்பமா என்றேன்
நற்களியாமென்றாள்
கைமா என்றேன்
சும்மா கலங்கினாளே பாணீ”
அடுத்த நாட்டு அரசனைப் பாடிவிட்டு வந்த புலவரைப் பார்த்து, 'என்ன பரிசு பெற்று வந்தாய்?' என அவர் மனைவி கேட்கிறாள்.
புலவர் 'களபம்' கொண்டு வந்திருக்கிறேன் என்கிறார்.
அது கேட்ட அவர் மனைவி, சந்தனம் என புரிந்து, சாப்பாட்டுக்கே வழியில்லை சந்தனமா என மனதில் நினைந்தவளாக, சரி பூசிக்கொள்ளுங்கள் என்கிறாள்
புலவரோ, என்ன இவள்? தவறாக புரிந்து கொண்டு விட்டாளே என நினைத்துக் கொண்டு, 'மாதங்கம்' கொண்டு வந்திருக்கிறேன் என்கிறார்.
அவர் மனைவியோ, 'மா தங்கம்' அதாவது அதிகமான பொன் எனப் புரிந்து கொண்டு, அதைக் கொண்டு நாம் நல வாழ்வு வாழலாம் என்கிறார்.
இப்போதும் தவறாகத்தான் புரிந்திருக்கிறாள் என உணர்ந்த புலவர், 'வேழம்' கொண்டு வந்திருக்கிறேன் என்றாராம்.
அவர் மனைவியோ, கரும்பு என புரிந்து கொண்டு, சரி சாப்பிடுங்கள் என்கிறார்.
புலவர், இப்போதும் தவறாகத்தான் புரிந்திருக்கிறாள் என அறிந்து, 'கம்பமா' கொண்டு வந்திருக்கிறேன் என்கிறார்.
மனைவி 'கம்பமா' என்பதை கம்பு மாவு எனப் புரிந்து கொண்டு, நல்ல களி செய்து சாப்பிடலாம் என்கிறாள்.
இதற்கு மேலும் சரி வராது என அறிந்த புலவர், 'கைமா' கொண்டு வந்திருக்கிறேன் என்கிறார்
அப்போதுதான் நீண்ட தும்பிக்கையை உடைய யானை என அறிந்த அவர் மனைவி, நம் இரண்டு வயிறுக்கே உணவில்லாத வறிய நிலையில், உடம்பெங்கும் வயிறாய் உள்ள யானைக்கு தீனிக்கு என்ன செய்வது என்று கலங்கினாளாம்.
யானை என்பதை எத்தனை வகையாக தமிழில் சொல்லலாம் என்று பாருங்கள்.
புலவர்கள் எக்காலத்திலும் பொருளுள்ளவராய் வாழ்ந்ததில்லையாம். கிடைக்கும் பெரும் பரிசில்களை எல்லோருக்கும் ஈந்து விட்டு அடுத்த வேளை உணவுக்கு எதிரபார்ப்பவராய் இருப்பர் என்ற குறிப்பையும் முதலிரு வரிகளுக்கிடையே தருவது தெரிகிறதல்லவா?

Monday, January 28, 2019

பாரதி சின்னப் பயல்

 

எட்டயபுரம் சமஸ்தானத்தில் காந்திமதிநாதன் என்பவர் தமிழ்ப் புலவர். பாரதியை விட வயதில் மூத்தவர். மன்னர் அவையில் பாரதியின் புலமையைச் சோதித்துக் கொண்டு அவரை ஈற்றடி கொடுத்து வெண்பா பாடச் சொன்னார்கள். காந்திமதிநாதன் "பாரதி சின்னப் பயல் ," எனும் ஈற்றடி கொடுத்துப் பாடச் சொன்னார். அதில் பாரதியை ஏளனம் செய்யும் நோக்கமும் இருந்திருக்கிறது. பாரதி உடனே பாடினார்.

"ஆண்டில் இளையவன் என்ற‌ந்தோ அகந்தையினால்
ஈண்டிங்கு இகழ்ந்தென்னை ஏளனம்செய் ‍ மாண்பற்ற‌
காரிருள்போல் உள்ளத்தான் காந்திமதி நாதனைப்
பாரதி (பார் அதி) சின்னப் பயல்"

"காந்திமதிநாதனைப் பார் அதி சின்னப் பயல்" எனும் பொருள்படும்படி அமைந்தது இந்தப் பாடல். இதைக் கேட்டு சபையோர் பரிகசிக்க குறுகிப்போனார் காந்திமதி நாதன். உடனே வயதில் மூத்தவரை அப்படி ஏளனம் செய்தது தவறு என்றுணர்ந்து பாரதி, மறுபடி பாடலை மாற்றிப் பாடினார். எப்படி?

"ஆண்டில் இளையவன் என்றுஐய அருமையினால்
ஈண்டின்று என்றன்தன்னை நீயேந்தினையால் மாண்புற்ற‌
காரதுபோல் உள்ளத்தான் காந்திமதி நாதற்கு
பாரதி சின்னப் பயல்"

வயதில் இளையோன் என்று அன்போடு என்னை நேசிக்கும் மண்புமிகு காந்திமதி நாதனின் முன் பாரதி சின்னப் பயல் என்று பொருள் வரும்படி பாடலை மாற்றியமைத்தார். சபையிலிருந்தோர் பாரதியின் பண்பினைப் போற்றினர். இந்த நிகழ்வு நடைபெறும் போது பாரதிக்கு வயது 14. இதுவே அவரின் இளமையில் புலமைக்கு ஓர் சான்று.

Sunday, January 13, 2019

தமிழ் மொழியின் இன்றைய நிலை

'மெல்லத் தமிழ் இனி சாகும்' என்ற வார்த்தை மெய்யாகி விடுமோ என்ற பயம் எனக்குள்ளே மெல்ல மெல்ல எழுகிறது, ஏனென்றால் இன்றைய சூழ்நிலையில் தமிழகத்தில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவ- மாணவியரில் 50 சதவிகிதத்தினருக்கு, இரண்டாம் வகுப்புத் தமிழ்ப் பாடத்தைப்  புரிந்துகொள்ளக்கூடிய திறன் இல்லை. எட்டாம் வகுப்பு மாணவ- மாணவியரில் 30 சதவிகிதத்தினருக்கும் இதே பிரச்னைதான். ஆங்கிலத்தை மின்னல் வேகத்தில் வாசிக்கும் இந்த மாணவ- மாணவியர்களால், தமிழைத் திக்கித் திணறித்தான் வாசிக்க முடிகிறது. இந்த விஷயத்தில் அரசுப் பள்ளி, தனியார்ப் பள்ளி என்கிற வேறுபாடு இல்லை. மேல்நிலைப் பள்ளி மாணவ - மாணவியரில் தனியார்ப் பள்ளிகளைவிட அரசுப் பள்ளி மாணவர்கள் சற்று பரவாயில்லை. அரசுப் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி முறை  இருப்பதால், தனியார்ப் பள்ளி மாணவர்களைவிட அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தமிழ் வாசிப்புத் திறன் சற்று அதிகம்.

தமிழ் மொழியை வாசிக்கவே மாணவ - மாணவியர் தடுமாறும் விஷயம் மிகவும் ஆபத்தானது. மொழியை வாசிக்கத் தெரிந்தால் மட்டுமே அதிலுள்ள கருத்தை ஆழமாகப் புரிந்துகொள்ள முடியும். இப்போது தமிழில் படிக்கத் தடுமாறுபவர்கள், பிற்காலத்தில் கஷ்டப்பட நேரிடும். அதனால், இந்த விஷயத்தில் பள்ளிகள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். ஆங்கிலத்தை வாசிக்கும்போது உற்சாகப்படுத்துவது போன்று, தமிழை வாசிக்கும்போதும் குழந்தைகளை  உற்சாகப்படுத்த வேண்டும்.

இந்நிலை மாற நாம் என்ன செய்ய வேண்டும் ?

குழந்தைகள் படிக்க விருப்பமுள்ள கதைப் புத்தகங்களை வாங்கிக் கொடுக்க வேண்டும். சித்திரக்கதைப் (காமிக்ஸ்) புத்தகங்கள்கூட மாணவர்களின்  வாசிப்புத்திறனை மேம்படுத்தும். பாடப்புத்தகத்தை எடுக்க மறுக்கும் மாணவர்கள்,  சித்திரக்கதைப் புத்தகங்களை வாசிக்கும் திறன்மூலம் தங்களை அறியாமலேயே தாய்மொழியைப் பயில பயிற்சி பெறுகின்றனர். தமிழ் மொழியில் வெளிவந்த சித்திரக்கதைப் புத்தகங்கள் அழிந்துபோயின. இதுகூட மொழி அழிவுக்கான ஓர் அடையாளம்தான். இப்போது ஆங்கில காமிக்ஸ் புத்தகங்களையே குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கின்றனர். தமிழ் மொழி சித்திரக்கதைப் புத்தகங்களே மொழியைப் படிக்கவும் காக்கவும் துணை நிற்பவை; குழந்தைகள் வாசிப்புத் திறனை அதிகரிக்கும் சக்தி படைத்தவை.

தாய் மொழியில் வாசிக்கும் திறனைக் குழந்தைகளிடம் இளம் பருவத்திலேயே விதைத்துவிட வேண்டும். இதை நமது வீட்டிலிருந்தே தொடங்கினால்தான் நம் மொழியைக் காக்க முடியும். இப்போது தமிழ் படிக்கத் தடுமாறும் குழந்தைகள் 10 வருடங்களுக்கு முன் ஆங்கில மோகம் பிடித்த பெற்றோர்களால் உற்சாகப்படுத்தப்பட்டவர்கள். தமிழ் மொழியை அலட்சியப்படுத்தியதற்கு விலையாக, தாய்மொழியை வாசிக்கத் திணறும் மாணவச் சமுதாயம் உருவாகியிருக்கிறது. நம்மையறியாமலேயே தாய்மொழியின் அழிவுக்கும் நாம் துணை நிற்கிறோம். அதேவேளையில் இந்தியை எதிர்த்து வெளியே குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறோம். இப்படியே சென்றால், வருங்காலத்தில் தமிழ்மொழியே அழிந்துவிடும் நிலை உருவாகிவிடும். ஆகையால், தமிழ் மொழியை வாசிக்கத் தடுமாறும் குழந்தைகள் மீது இனி தனிக்கவனம் செலுத்தி, வாசிப்புத்திறனை மேம்படுத்தினால், நம் மொழி நம் கையில்.

வாழிய செந்தமிழ் ! வாழ்க  நற்றமிழர் !! வாழிய பாரத மணித்திரு நாடு !!!

- நன்றி விகடன் 

Thursday, September 6, 2018

யாருக்கு நல்ல அறிவுரை கூறவேண்டும்?


விவேகசிந்தாமணி பாடல்: 10

"வானரம் மழைதனில் நனையத் தூக்கணம்
தானொரு நெறிசொலத் தாவிப் பிய்த்திடும்
ஞானமும் கல்வியும் நவின்ற நூல்களும்
ஈனருக் குரைத்திடில் இடர தாகுமே"

பொருள் விளக்கம் :
ஒரு குரங்கு மழையில் நனைந்துகொண்டிருந்தது, அதனைப் பார்த்த தூக்கணாங் குருவி கவலைப் பட்டு அதனிடம் சொன்னது , நீயும் என்னைப் போல கூடு கட்டி இருந்தால் இப்படி மழையில் நனைந்து கொண்டு இருக்க வேண்டியது இல்லையே என்று. அதனால் ஆத்திரம் கொண்ட குரங்கு அந்த தூக்கணாங் குருவி கூட்டையே பிய்த்து எறிந்துவிட்டது. அதுபோல
நாம் படித்த அரிய நூல்களில் உள்ள பல நல்ல கருத்துகளை ஈன புத்தியுடைய கெட்டவர்களுக்கு சொல்லப் போனால் சொல்பவர்களுக்கே அது ஆபத்தாக முடியும்.

இதைத் தான் தெய்வப் புலவர் வள்ளுவர் இரண்டே அடியில் கூறியிருப்பார்

"புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்
நன்குசலச் சொல்லு வார்."

குறள் விளக்கம் :
நல்லோர் நிறைந்த அவையில் மனத்தில் பதியும்படி கருத்துக்களை சொல்லும் வல்லமை பெற்றவர்கள், அறிவற்ற பொல்லாதோர் உள்ள அவையில் அறவே பேசாமாலிருப்பதே நலம்.